உலுக்கும் கொரோனா… மாஸ்டர் ஆடியோ லான்ச்-ல் ஆடியன்சை தவிர்க்க காரணம் இதுதான்!

நல்ல மனிதர். தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனி வழி அவருடையே பாலிசி. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். அந்த வகையில் அஜித்தை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

By: Updated: March 11, 2020, 07:29:48 AM

மாஸ்டர் ஆடியோ லான்ச் வரும் மார்ச் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தன் மீதான ஐடி ரெய்டு, தன் மீது சில கட்சிகளும், அமைப்புகளும் வைக்கும் விமர்சனம் போன்றவற்றிற்கெல்லாம் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்பதே ஒவ்வொரு விஜய் ரசிகனின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் காஞ்சிபுர மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளரும், காஞ்சிபுர மாவட்ட இளைஞரணித் தலைவருமான DR.ECR.P.சரவணன். இவற்றையெல்லாம் தாண்டி விஜய்யுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கும் முக்கிய தளபதிகளில் ஒருவர் இவர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்த இசை வெளியீட்டு விழா, இம்முறை ஒரு தனியார் ஹோட்டலில் நடத்தப்படுகிறது. ரசிகர்கள் ஏன் இம்முறை புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்?

முதல் விஷயம், ரசிகர்கள் புறக்கணிக்கப்படல. தளபதி, ரசிகர்களை என்னிக்குமே புறக்கணிக்க மாட்டார். ஆனா, இந்தமுறை கொரோனா வைரஸ் காரணமா, கூட்டம் அதிகம் சேர வேண்டாம்-னு முடிவு பண்ணி இருக்காங்க. கவர்மென்ட்டே இதுபற்றி எல்லாம் விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டு இருக்காங்க. அதனால தான், ரசிகர்களை தவிர்த்துட்டு இந்த ஆடியோ லான்ச் வைக்குறாங்க. மத்தபடி ரசிகர்களை அவாய்ட் பண்ணனும்-னு எந்த எண்ணமும் இல்லை.

ஐடி ரெய்டு உட்பட சில விஷயங்களைப் பற்றி பேசி அரசாங்கத்தை மேற்கொண்டு பகைத்து கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தான் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

அரசாங்கத்தை பகைச்சிக்குறது-னு ஏதும் இல்ல. மெயின் விஷயம் ‘கொரோனா’ தான். ஐடி ரெய்டு என்பது அவர்களது கடமை. விஜய் அதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தார். தமிழக அரசுக்கும், ஐடி ரெய்டுக்கும் சம்பந்தம் இருக்கும்-னு நாங்க நினைக்கல. ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் இல்லாம இருந்திருந்தா, பிரம்மாண்டமாவே ஆடியோ லான்ச் நடத்தி இருப்பாங்க-னு நம்புறோம்.

கோவையில் ஒரு கல்லூரியில் ஆடியோ லான்ச் நடத்த அனுமதி கேட்டதாகவும், பாண்டிச்சேரியில் உள்ள கல்லூரிகளிலும் கூட நடத்த அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறதே?

கடந்த முறை சாய்ராம் கல்லூரில தான் ஆடியோ லான்ச் நடந்தது. அதற்கு மத்திய அமைச்சர் ஒருவரே அனுமதி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருந்தார். கோவையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில், மார்ச் 15ம் தேதியன்று ஆடியோ லான்ச் நடத்த அனுமதி கேட்டது உண்மை தான். ஆனால், அந்த குறிப்பிட்ட தேதியில் வேறு ஒரு விழா இருந்ததாக கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பாண்டிச்சேரியில எந்த கல்லூரியிலும் அனுமதி கேட்கல. அந்த தகவல் உண்மையில்ல. கோவையில் அனுமதி கிடைக்காதது உண்மை தான்.

இதனால் ரசிகர்கள் வருத்தப்பட மாட்டார்களா?

நானும் தளபதியின் தீவிர ரசிகன் தான். அன்றைய தினம் டிவியிலேயே லைவ் பண்றாங்க. இதைவிட வேற என்ன வேணும்? அதனால ரசிகர்கள் யாரும் வருத்தப்பட மாட்டாங்க.

ஆடியோ லான்ச் விழாவில் அவர் ஆற்றும் உரை முன்பே தயாரிக்கப்பட்ட ஒன்று (Scripted) என்று கூறப்படுகிறதே. வேறு ஒரு நபர் தயாரித்து கொடுத்த கருத்துகளை தான் விஜய் பேசுகிறாரா?

கண்டிப்பா இல்ல. விஜய் அவர்கள் பெரிய பெரிய மேதைகளின் புத்தகங்களை எல்லாம் படித்து வருகிறார். அதில் படிக்கும் கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் யார் எழுதிக் கொடுத்ததையும் வந்து படிக்கவில்லை.

குறிப்பா, ஒரு பிரபல யூடியூப் சேனலில், விஜய் கேரவனில் உட்கார்ந்து ரிகர்சல் எடுத்துவிட்டு வந்து பேசுவார்-னு சொல்லி இருக்காங்க. அது ரொம்ப தவறான கருத்து. அந்த யூடியூப் சேனல்ல இருந்து வந்து விஜய் கண்ணாடி முன்னாடி ரிகர்சல் பண்றாரு-னு நேரில் பார்த்தாங்களா?. அவங்களோட சேனலுக்கு subscribers அதிகரிக்க இதுபோல பேசி இருக்காங்க. இதெல்லாம் தேவையில்லாத வார்த்தைகள்.

ரசிகர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்வில், விஜய் சொல்லப்போற குட்டிக் கதை என்ன?

என்னை பொறுத்தவரை, இந்த மாஸ்டர் ஆடியோ லான்ச்-ல அரசியல் ரீதியா அவர் எந்தவொரு கருத்தையும் பதிவு பண்ண மாட்டார்-னு நினைக்கிறேன். ஏன்னா… எது பேசுனாலும் தவறா போயிடுது. ஐடி ரெய்டு தவிர்த்து வேண்டுமானால் சில விஷயங்களைப் பேசுவார். ஜென்ரலாகவே அவரது உரை இருக்கும். இருந்தாலும், இன்னைக்கு நாட்டு-ல நடக்குற பிரச்சனைகள் குறித்து அவர் சில விஷயங்களைப் பேச வாய்ப்பிருக்கு. நூறு சதவிகிதம் அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.

தமிழக வரலாற்றிலேயே, மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர் ஒருவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்படியே அழைத்துச் சென்று, அவரது வீட்டில் ரெய்டு நடத்துவது என்பதெல்லாம் இதுவரை நடக்காத ஒன்று. அதற்கு கூட விஜய் தரப்பில் இருந்து ஆடியோ லான்ச்சில் ஆதங்கத்தை வெளிப்படுத்த மாட்டார்களா?

முதலில் இதை எதிர்ப்பாகவே நாங்க நினைக்கல. அவங்க கடமையை அவங்க செஞ்சாங்க. எங்க கடமையை நாங்க பண்றோம்.

ஆடியோ லான்ச் அன்று அரசியலையே பற்றி விஜய் எதுவும் பேச மாட்டார்.

‘நான் அரசியலுக்கு வருவேன்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, ஒருவேளை விஜய் கடைசி வரை அரசியலுக்கு வராமலேஏ போனால் உங்களை போன்ற மிக முக்கிய நிர்வாகிகளின் மனநிலை என்னவாக இருக்கும்? அப்போது உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

தளபதி அவர்கள் இன்னைக்கு திரை உலகத்துல வசூல் சக்கவரத்தியாக இருக்கிறார். நாங்க தோல்வியிலும் அவர் பக்கம் நிக்குறோம், வெற்றியிலும் நிக்குறோம். ஒருவேளை நாளை அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் என்றும் நாங்கள் அவருக்கு துணையாக நிற்போம்.

வரல-ன்னா அது உங்களுக்கு ஏமாற்றம் தானே?

ஏமாற்றம்-னு நாங்க நினைக்க மாட்டோம். எங்க தளபதி நடிக்குறாருல. நடிக்காமலா போயிடப் போறாரு? (இன்னும் சில விஷயங்கள் பேசிடுவேன்… ஆனா, சில பிரச்சனை வரும்-னு அமைதியா இருக்கேன் என்று சிரிக்கிறார்)

ரசிகர்களை விஜய் சந்தித்து கைக்குலுக்கினால், பிறகு டெட்டால் போட்டு கை கழுவுவார் என்று இயக்குனர் ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். விஜய்யின் Hygienic குறித்து நமக்கு எந்த கேள்வியும் இல்லை. ஆனால், விஜய்யிடம் அப்படி ஒரு பழக்கம் இருப்பது உண்மை தானா?

அந்த இயக்குனர் பெயர் சாமி. சர்ச்சையாகவே படம் எடுப்பவர் அவர். உலகத்துலயே அவர மாதிரி ஒரு இயக்குனரை பார்க்கவே முடியாது. அந்த மாதிரி ஒரு பெரிய இயக்குனர் அவர். கொச்சையாக படம் எடுப்பவர். எங்க தளபதியை பற்றி பேச அவருக்கு தகுதியே கிடையாது.

வருஷா வருஷம், மே 1 அன்னைக்கு, 1500 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை கொடுத்து, கிஃப்ட் பாக்ஸ் கொடுத்து, தளபதி அவர் கையாலேயே பிரியாணி பரிமாறுவார். அப்போ அவரு உடம்புல அவ்ளோ வியர்வை கொட்டும். அவரோட ஷர்ட்டே முழுசா நனைந்து போயிடும். ஆனா அப்போ கூட, வியர்வை சாப்பாடுல பட்டுடக் கூடாது-னு, வியர்வையை மட்டும் துடைத்துக் கொள்வாரே தவிர அத்தனை பேருக்கும் சாப்பாடு பரிமாறாம போக மாட்டார். இப்படிப்பட்ட நபர் அவர்.

22 வருஷமே நான் அவர் கூட இருக்கேன். அவர் அது போன்று சோப் போட்டு கழுவியது போன்று ஒருமுறை கூட நாங்க பார்த்ததில்லை.

சரி, விஜய் எப்போ அரசியலுக்கு வர்றார்?

காலம் தான் பதில் சொல்லும்.

ரஜினி, ‘காலம் தான் பதில் சொல்லும்’-னு சொன்னா விமர்சனம் பண்றீங்க? இப்போ நீங்களும் இதையே சொல்றீங்களே?

ரஜினி 1996ல இருந்தே இதைத்தான் சொல்லிட்டு இருக்கார். அப்போதே அவர் கட்சியை தொடங்கி இருக்கலாம். 20 வருஷம் கழிச்சு இப்போ 2020 ஏப்ரல் மாதம் அவர் கட்சி தொடங்குவார்-னு சொல்றாங்க. அதுக்கான பணியையும் அவர்கள் செஞ்சிட்டு இருக்காங்க.

அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு வலிமையான foundation வேணும். அதுல ஒருமுறை இறங்கிட்டா மீண்டும் எழுந்திருக்கவே முடியாது. இறங்கிட்டா நீச்சல் அடிச்சு போயிட்டே இருக்கணும். ‘கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்’-ங்கறதெல்லாம் இங்க வேலைக்கே ஆகாது.

அதுக்கான foundation உருவாக்கிட்டு, அதற்கான பணிகளை செஞ்சிட்டு, அதுக்கப்புறம் தான் அரசியலில் இறங்குவதை பற்றி யோசிக்கணும்.

அப்போ, இதையெல்லாம் செஞ்சிட்டு விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்-னு நம்பலாம், இல்லையா?

வந்தாலும், வரலைனாலும் அவர் கூடவே எப்போதும் இருப்போம்.

விஜய்யின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவர் நீங்க. அஜித் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

நல்ல மனிதர். தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனி வழி அவருடையே பாலிசி. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். அந்த வகையில் அஜித்தை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

வேறு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

‘விலையில்லா விருந்தகம்’ என்ற பெயரில் தளபதி சார்பில் தினம் 130 – 150 பேருக்கு அன்னதானம் வழங்கிக்கிட்டு இருக்கோம். தினம் காலை உணவு இலவசமாக அங்கு வழங்கப்படுகிறது. இதுவரை 15 மாவட்டங்களில் ‘விலையில்லா விருந்தகம்’ நிறுவி அன்னதானம் செய்திட்டு வர்றோம். இதுக்காக ஒரு வருஷத்துக்கு 6 லட்சம் செலவாகுது. அத்தனையும் எங்க சொந்த செலவில் செய்திட்டு வர்றோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Ecr p saravanan exclusive interview on vijays master audio launch march

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X