ஜெகன்நாத் இயக்கத்தில் இன்று ரிலீஸாகியிருக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. ‘பசங்க’ மற்றும் ‘கோலிசோடா’ படத்தில் நடித்த பாண்டி, தமிழ் எனப் பெயரை மாற்றி ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கிறார். யோகி பாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஆனந்தியை ஒருதலையாகக் காதலிக்கும் ஏழெட்டு பேரில், தமிழும் ஒருவர். ஒருநாள் பஸ் ஏறும்போது ஒரு செருப்பைத் தவறவிட்டு விடுகிறார் ஆனந்தி. ‘அது அப்பா வாங்கிக் கொடுத்த செருப்பு’ என ஆனந்தி கெஞ்சினாலும், பஸ் நிற்காமல் போகிறது. உடனே பஸ்ஸில் இருந்து குதித்து செருப்பைத் தேடிப் போகிறார் தமிழ்.
ஒரு செருப்பு போனதால், இன்னொரு செருப்பையும் பஸ்ஸிலேயே விட்டுவிடுகிறார் ஆனந்தி. அந்த சமயம் சிரியாவில் இருக்கும் ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். குறி சொல்பவரான தமிழின் அம்மா, ‘தொலைந்துபோன உன்னோட இரண்டு செருப்புகளையும் எப்போது மறுபடியும் பார்க்குறியோ, அப்போது உன்னுடைய அப்பா திரும்பக் கிடைப்பார்’ என்று சொல்ல, அதைத் தேடி அலைகிறார் ஆனந்தி.
அவர் அலைவதைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் தமிழ், ‘நீங்க அலைய வேண்டாம். செருப்பே தானாக உங்க கண்ணில் படும்’ என குறிசொல்லும் இடத்தில் இருந்து போன் மூலமாகத் தெரிவிக்கிறார். ஆனந்தி வீட்டில் இருந்து அப்பாவுக்காக உருக, செருப்பைத் தேடி தெருத் தெருவாக, சந்து சந்தாக, ஒரு குப்பைத்தொட்டி கூட விடாமல் உடைந்த கையுடன் தமிழ் தேடுவதுதான் மீதிக்கதை. அவருக்கு செருப்பு கிடைத்ததா? தமிழின் காதலை ஆனந்தி ஏற்றுக் கொண்டாரா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்க.
கல்லூரி மாணவனாக தமிழ், தன்னுடைய பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ‘எஃபக்ட்டுன்னா என்னனு தெரியுமா’ என்று தான் பட்ட கஷ்டங்களை யோகி பாபுவிடம் சொல்லி கலங்கும் இடத்தில், நம்மையும் கலங்க வைக்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறார் ஆனந்தி. அவரின் சின்னச் சின்ன முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. அவரின் தோழியாக வரும் பெண்ணும் அசரடிக்கிறார். ஹீரோயினாகவே அவர் ஜொலிக்கும் அளவுக்குத் திறமை இருக்கிறது.
படத்தை தொய்வு இல்லாமல் காமெடி மூலம் நம்மைக் கொண்டுபோவது யோகி பாபு மட்டுமே. அவர் வரும் இடங்களில் ஆங்காங்கே சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வருகிறது. சிங்கம்புலி, பால சரவணன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுத்தமாக சிரிப்பு வரவில்லை. கே.எஸ்.ரவிகுமார், ஜெயப்பிரகாஷ் போன்றவர்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
சுகசெல்வன் ஒளிப்பதிவில் அத்தனை ப்ரேமும் அவ்வளவு அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இஷான் தேவ் இசையில் சிம்பு பாடிய ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ பாடல் ரசிக்க வைக்கிறது. தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை சுமார் ரகம்.
காதலியோட செருப்புக்காக இப்படி பைத்தியக்காரத்தனமாகவா அலைவான்? அதுவும் ஒருதலைக் காதல் என்ற கேள்வி எழுந்தாலும், காதல் இந்த மாதிரி பைத்தியக்காரத்தனங்களைத்தான் பண்ண வைக்கும் என்று மனது சமாதானம் செய்து கொள்கிறது. ஆனால், திரைக்கதையில் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் மனதில் பதிந்திருக்கும்.
கல்யாணமானவர்கள் பருப்பிற்கு அலைவதும், காதலர்கள் செருப்பிற்கு அலைவதும் சகஜம்தானே...