அனைத்து பெண்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் எதிர்நீச்சலின் இயக்குநர் திருசெல்வத்திடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக பேசினோம்:
2003-ம் ஆண்டு வெளியான ’கோலங்கள்’ ஒரு மாபெறும் வெற்றி , தற்போது 2022 ’எதிர்நீச்சல்’ பலரால் ரசிக்கப்படுகிறது. இந்த இரண்டு வெற்றியை எப்படி பார்க்குறீங்க ?
கிட்டதட்ட 6 வருடங்களை கடந்து 7-ம் வருடம் தொடங்கும்போது தான் கோலங்கள் தொடர் நிறைவுபெற்றது. வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு செல்லும் பெண்களின் மன அழுத்தம் குறித்த கதையாக இருந்தது. நகர்புற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதையொட்டி நடைபெறும் விஷயங்களை மையாக கொண்டு கதையை எழுதினேன். பெண்கள் ஒடுக்கப்பட்டு அதிலிருந்து மேலெழுந்து வரும் நபர்களாக இருப்பவர்களை நான் கதையின் நாயகியாக எடுத்துக்கொண்டேன். எதிர்நீச்சலைப் பொறுத்தவரை, வீட்டிலிருக்கும் பெண்களின் அழுத்தங்களை கதையாக அமைத்திருக்கிறேன். தஞ்சாவூரில் உள்ள கிராமத்தில் பிறந்தவன் நான் என்பதால், எனது குடும்பத்தில் பல அழுத்தங்களை சந்திக்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். நமது வீட்டில் இருக்கும் அப்பத்தாவிற்கு என்றுமே தெரியாது என்று ஆண்கள் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒட்டுமொத்த குடும்ப நிர்வாகத்தை அவர்கள்தான் பார்த்துக்கொள்வார்கள். அந்த தலைமுறை தொடங்கி இப்போதுவரை பெண்கள் குடும்பங்களில்தான் அதிக நெருக்கடிகளை சந்திக்கிறார்கள்.
இப்போது பெண்களுக்கு ஜனநாயகம் இருப்பதாக ஒரு வெளித் தோற்றம் இருந்தாலும், படித்த பெண்களால் பிடித்த வேலைக்கு செல்ல முடியவில்லை. அவளை மீண்டும் சமையலறைக்குள் தள்ளும் முயற்சி தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படி பெண்கள் ஒடுக்கப்படும் போது, அவர்கள் உள்ளம் ஒடுக்கப்படுவதில்லை. ஒரு வேட்கை எதிர்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் எதிர்நீச்சலின் மையம் என்று நினைக்கிறேன். பட்டம்மாள் என்பவர், வாழ்நாள் முழுவதும் எடுக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்காமல் கடந்த தலைமுறையின் ஒரு வெடிப்பு குரல் .
சினிமாவை நோக்கிய உங்கள் கனவுதான் சீரியலுக்கு கொண்டு வந்ததா? இந்த பயணம் எப்படி அமைந்தது ?
நான் சீரியல் இயக்குநராக வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. மலையாள படங்களில் ‘sound engineer’ வேலை செய்திருக்கிறேன். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை செய்தேன். மேலும் ’காதலுக்கு மரியாதை’ முதல் ’ஹேராம்’ படம் வரை இளையராஜாவிடம் வேலை செய்தேன். நடிகர் விஜய்க்காக ஒரு கதை எழுதினேன். அது அவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அப்போது இயக்குநர் திருமுருகன் அவருடன் சேர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். அப்போது நான் சீரியல் பார்க்கவே மாட்டேன். எங்கள் வீட்டில் சீரியல் பார்க்கும் நபர்களை திட்டுவேன். இசைத்துறையில் இருந்ததால், சீரியல் இசையை பார்த்தால் எரிச்சலாக இருக்கும். ‘என்னப்பா இசையை தப்பு தப்பா போடுறாங்களேனு கோவம்தான் வரும்” . கதை சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்று தான் சென்றேன். சிறிது காலம் இங்கே வேலை செய்யலாம் என்றுதான் ’கோலங்கள்’ தொடரின் ஆரம்பத்தின்போது நினைத்தேன். ஆனால் எனக்கு ஒரு விஷயத்தை செய்ய தொடங்கினால், அதில் ஈடுபாடு அதிகமாகிவிடும். மேலும் ஒரு நல்ல சீரியல் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதுவே இத்தனை ஆண்டுகள் சின்னத்திரையில் என்னை பயணிக்க வைத்தது.
சினிமாவிற்கும்/ சீரியலுக்கும் எழுத்தின் மொழி மாறுமே ? எப்படி சீரியலியின் தன்மைக்கு உங்கள் எழுத்தை மாற்றிக்கொண்டீர்கள்?
சீரியல் அல்லது சீரிஸ் எல்லாம் ஒரு திரைப்படத்தைப் போலத்தான். ஒரு திரைப்படத்திற்கு என்ன தேவையோ, அவை இதற்கும் தேவைதான். ஆனால் திரைக்கதையை வேறுமாதிரி கையாள வேண்டும். இதற்கு பழக்கப்பட காலம் எடுத்தது. இப்போது பழகிவிட்டேன் என்று நினைக்கிறேன். என்னுடைய இலக்கிய வாசிப்புதான் எனக்கு பல நேரங்களில் துணை நிற்கிறது. மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர், பால் சக்காரியா, என்.எஸ் மாதவன் ஆகியோர் என்னை ஈர்த்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை நிறைய எழுத்தாளர்களின் புத்தகத்தை படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்னை வெகுவாக ஈர்க்கிறது. இதுதான் எனது அடித்தளம். அவர்கள்தான் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.
ஆண் நண்பரை ஒரு கண்ணியமாக காண்பித்திருப்பீர்கள். உங்களை அனைவரும் ’தொல்ஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது இந்த ‘boy beastie” என்று கூறப்படும் பதத்தை எப்படி பார்க்குறீங்க?
அழகிய தமிழ் பெயர்தான் தொல்காப்பியம். இதுபோன்ற பெயர்களை நாம் கேட்டிருப்போம். ஒரு அன்பின் வெளிபாட்டாக அந்த பெயரை அழைக்கும்போது அது ’தொல்ஸாக’ மாறியது. நான் தான் அந்த முதல் boy beastie என்ற மீம்ஸை எனது மகள் எனக்கு அனுப்பி இருந்தார். இந்த ’boy beastie’ என்று சொல்வதை நான் கொச்சையாகத்தான் பார்க்கிறேன். அபி- தொல்ஸ் நட்பை பார்த்து, என் மீது அன்புகொண்டு பல கடிதங்கள் வந்தன. பல பெண்கள் என்னை அவர்களது நண்பர்களாக நினைத்து, அவர்களது எல்லா பிரச்சனைகளையும் கடிதங்கள் மூலம் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். நான் அதற்கு தீர்வு சொல்வேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. என்னால் அதற்கு பதில் போட முடியவில்லை.
தேனியிலிருந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனக்கு கடிதம் எழுதுவார்கள். அவர்கள் மேலோட்டமாகத்தான் நண்பர்களாக இருந்தார்கள். கோலங்கள் சீரியல் பார்த்ததும், அவர்களது நட்பு மேலும் அதிகமானது. சீரியல் முடியும்போது, அந்த ஆண் நண்பர் மனரீதியாக பாதிக்கப்பட்டார். “ தற்கொலை செய்துகொள்ள போறேன் சார். நாங்களும் இப்படி பிரிஞ்சுருவோமா ? சார்” என்று தொலைபேசியில் அழைத்து அழுதார். ”இது ஒரு சீரியல்தான், இவ்வளவு ஆழமாக சிந்திக்க வேண்டாம்” என்று அவரிடம் கூறினேன். இப்படி பல அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது. எனவே “ boy beastie” என்று கூறி உறவை கொச்சைப்படுதுவது சரியான போக்கு இல்லை.
’அபி’ என்ற பெயர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈடுபாடு?
ஒரு இனிமையான பெயர். ’வல்லமை தாராயோ’ வெப் சீரிஸில் கதாநாயகிக்கு அபி என்ற பெயர் வைத்ததும், தேவையானி மேடம் அழைத்து மிகவும் வருத்தப்பட்டார். ”அது எனது பெயர்தான். எனது உணவர்வோடு கலந்தது. இப்படி மற்ற கதாபாத்திரத்திற்கு வைத்துவிட்டீர்கள் ” என்று கூறினார்.
கணவராலும் குடும்பத்தாலும், இவ்வளவு கொடுமைக்குள்ளாகும் பெண்கள் ஏன் எப்போதும் தனிமையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு இயல்பான காதல் வராதா ? அப்படி ஏன் உங்கள் சீரியலில் காட்சிகள் அமைவதில்லை ?
வல்லமை தாராயோ வெப் சீரிஸ் அப்படி ஒரு காதல் அபிக்கு இருப்பதாக கதை எழுதினேன். ஆனால் சில காரணங்களால் அது இடம் பெறவில்லை.
எதிர்நீச்சல் குறித்து பெண்களிடத்திலிருந்து வந்த பாராட்டு, ஆண்களிடத்திலிருந்து வந்த ஒரு அதிர்ச்சி என்ன ?
எனது அம்மாவின் தோழி அவருக்கு 76 வயது இருக்கும். பெரிதாக பேசமாட்டார். ஆனால் இந்த சீரியல் பார்த்து எனக்கு அழைத்தார். “எதிர்நீச்சல் பார்க்குறேன். இப்போதான் தெரியுது நாங்கள்ளாம் எப்படி அடிமைபட்டு கிடந்தோம்னு “ என்று கூறினார்.
பல ஆண்களிடத்திலிருந்து வாழ்த்துக்கள்தான் வந்தது. ஆனால் ஒருவர் மட்டும் கூறியதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் “ சார் சீரியல் நன்றாக இருக்கிறது. ஆனால் இதை பார்த்து பெண்கள் வீட்டில் கேள்வி கேட்டால் என்ன செய்வது. பெண்கள் கேள்வி கேட்டால் குடும்பத்தின் அமைதி சிதைந்துவிடாதா சார்? என்றார். நான் சிரித்துக்கொண்டே இதை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் போய் கேளுங்க ” என்றேன்.
ஜெய்லர் படபிடிப்பின்போது, ரஜினி சார் எனது நண்பரிடம் எதிர் நீச்சல் பற்றி பேசியிருக்கிறார். அவரது வீட்டில் தொடர்ந்து பார்ப்பதாக கூறியிக்கிறார். 2010-ம் ஆண்டில் ரஜினி சாருக்கு ஒரு கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அது கதாநாயகியை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் ஹிரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை சொல்லிமாறு கேட்டார்.
ஒரு காலத்தில் பெண்ணியம் குறித்த தவறான கற்பிதம் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்றாலும், பெண்ணியத்திலேயே தலித் பெண்ணியம் மற்றும் உழைக்கும் வர்க்க பெண்ணியம் என்று பல கோணங்கள் இருக்கிறது. ஒரு system அதாவது அமைப்பு முறையிலிருந்தே அதற்கு எதிராக கேள்வி கேட்ட முடியும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயம் நம்புகிறேன். இந்த கட்டமைப்புக்கு எதிராக கேள்வி எழுப்ப வைப்பதே பெரிய வேலைதான். அதை பலரும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதை நானும் செய்ய நினைக்கிறேன். இன்று பட்டமாள் என்பவர் அடிமையாக இருந்து வெடித்து எழுந்தவள்தான். கேள்வி எழுப்புவதுதான் மாற்றத்திற்கான முதல் படி.
நீங்கள் கதாநாயகியாக தேர்வு செய்யும் பெண்கள் வெள்ளையாகத்தான் இருக்கிறார்கள் ? இதில் ஒரு மாற்றத்தை ஏன் செய்யவில்லை ?
எதிர்நீச்சல் கதாநாயகி பாத்திரத்திற்கு பலரை “ audition” செய்தோம். Dusky-யாக இருப்பவர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் சீரியல் நடிக்க மாட்டேன் என்றார்கள். இன்ஸ்டிராகிராமில் கூட வீடியோ போடும் பெண்கள் நாங்கள் சீரியலில் நடிக்க விரும்பவில்லை என்கிறார்கள். நீங்கள் நன்றாக நடிக்கும் மாநிறம் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும் ஒருவரை கூறுங்கள் நான் அப்போது வேண்டாம் என்று கூறினால் நீங்கள் சொல்வது சரி என்று ஏற்றுக்கொள்கிறேன்.
நடிப்பில் மட்டுமில்லை கேமிரவிற்கு பின்னால் பெண்கள் வேலை செய்ய வேண்டும். என்னோடு அப்படி பலரும் வேலை செய்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெயர் சொல்லும் இடத்தில் வேலை செய்கிறார்கள்.
அடுத்து என்ன திட்டம் சார்?
2019-ம் ஆண்டு முதலே திரைப்படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்யத்தொடங்னேன். கொரோனா வந்ததால் தாமதமாகிவிட்டது. திரைப்படம் இயக்கும் வேலைகள் தொடங்கியிருக்கிறேன். 2023ம் ஆண்டு படபிடிப்புக்கு சென்றுவிடுவேன். நிச்சயமாக மக்களுக்கான படமாக இருக்கும். விருவிருப்பான ‘psychological thriller’ படமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.