நடிகை அமலா பாலைத் தொடர்ந்து, நடிகர் ஃபஹத் ஃபாசிலும் போலி முகவரியில் கார் வாங்கியுள்ள விஷயம் வெளியாகியுள்ளது.
அமலா பால், கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மாத்ருபூமி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார் அமலா பால். ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புடையது இந்தக் கார்.
கேரளாவைச் சேர்ந்த அமலா பால், அங்கு காரைப் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாயை வரியாகக் கட்ட வேண்டும். எனவே, புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். அங்கு பதிவுசெய்ய ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும்.
அமலா பாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெரேசா தெருவைச் சேர்ந்த ஒரு இளைஞரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஞ்ஜினீயரிங் படித்துவரும் அந்த இளைஞருக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் கொடுமையான விஷயம்.
அமலா பாலின் இந்த செய்கையால், கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க நேரிடும். ஆனால், அபராதத்துடன் சேர்ந்து வரித்தொகையைச் செலுத்த அமலா பால் தரப்பு தயாராக இருப்பதால், சிறை தண்டனை வரை செல்லாது என்கிறார்கள்.
இந்நிலையில், மலையாள முன்னணி நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் ஃபாசிலும் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மாத்ருபூமி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. PY-05-9899 என்ற பதிவு எண் கொண்ட பென்ஸ் இ மாடல் காரைப் பயன்படுத்தி வருகிறார் ஃபஹத் ஃபாசில்.
அவர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கார், நம்பர் 16, இரண்டாவது குறுக்குத் தெரு, புதுப்பேட்டை, லாஸ்பேட்டை, புதுச்சேரி என்ற முகவரியில் இருக்கிறது. ஆனால், இந்த முகவரியில் சிறிய குடும்பம் ஒன்று வாடகைக்கு வசித்து வருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் பதிவு செய்தால் 14 லட்ச ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும் என்பதால், ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் புதுச்சேரியில் பதிவு செய்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில்.
அமலா பாலைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசிலும் சிக்கியிருப்பதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஃபஹத் ஃபாசில். இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப்படம்.