/indian-express-tamil/media/media_files/2025/09/30/mgr-1-2025-09-30-13-46-16.jpg)
அவனவன் என்னவே கேக்குறான், இவன பாரு; பிரபல இயக்குநர் சொன்னதை கேட்டு தலையில் அடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தமிழ் திரையுலகில் ஒரு தனி முத்திரை பதித்தவர் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியதில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
கவிஞர் கண்ணதாசனின் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணிப்புரிந்த எஸ்.பி. முத்துராமன், அதன்பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கிருஷ்ணன், பஞ்சு அருணாச்சலம் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக எஸ்.பி.முத்துராமன் பணியாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியான 'கனிமுத்து பாப்பா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக எஸ்.பி.முத்துராமன் அறிமுகமானார். இவர் இயக்கிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்றன. நடிகர் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து பணியாற்றிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றன.
'முரட்டுக்காளை', 'போக்கிரி ராஜா', 'பாயும் புலி', 'துடிக்கும் கரங்கள்', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மிஸ்டர் பாரத்', 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்', 'தர்மத்தின் தலைவன்' போன்ற பல திரைப்படங்கள் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தின.
இப்படி பல புகழை பெற்ற இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலையில் அடித்துக் கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ”எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வேறு ஒரு படம் பார்ப்பதற்காக வந்தார். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு அனைவரையும் நலம் விசாரித்து கொண்டே வந்தார்.
அப்போது நான் ஒரு உதவி இயக்குநர் ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்தேன். என்னை பார்த்து எம்.ஜி.ஆர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நான் நன்றாக யோசித்துவிட்டு உங்க வீட்டில் இருந்து சிக்கன் நெய் ரோஸ்ட் வரும் அல்லவா அது வேண்டும் என்றேன்.எம்.ஜி.ஆர் தலையில் ஆடித்துக் கொண்டு எல்லாரும் என்னவெல்லாமோ கேட்கிறார்கள் இவன் நெய் ரோஸ்ட் கேட்கிறானே என்று சிரித்துவிட்டு போய்விட்டார்.
அடுத்த நாள் நான் கேட்டேன் என்பதற்காக எம்.ஜி.ஆர் அந்த சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுத்துவிட்டார் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.