திரையுலகில் ஜெயிப்பதற்கு குடும்ப பின்னணியுடன் வந்தாலே அதில் ஜெயிக்க மிகவும் சிரமம் எடுக்க வேண்டும். பல தடைகளைக் கடக்க வேண்டும். ஆனால், எவ்வித பின்னணியும் இல்லாமல், தனது கடின முயற்சியையும், உழைப்பையும் நம்பி சினிமா உலகில் கால் பதித்தவர் நடிகர் அஜித்குமார்.
இன்று அவருக்கென தனி ரசிகர் பட்டாளம். மற்ற நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்களும், அஜித்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவருடைய எளிமை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கடைசி தொழிலாளியின் மீதும் அக்கறையுடன் பேசும் குணம். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், திரையுலகில் கால் பதித்த அஜித், இன்று தமிழ்நாட்டு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன்.
அமராவதி முதல் வெளியாகவிருக்கும் விவேகம் வரை இடையிடையே எத்தனையோ தோல்விகள். எத்தனையோ விபத்துகள். ஆனால், அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறார் அஜித். அதனால்தான், அஜித்தின் ரசிகர் என்று சொல்வதையே இளைஞர்கள் பெரும் கர்வமாக எண்ணிக்கொள்கின்றனர்.
இன்று அஜித் சினிமாவில் கால்பதித்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருடைய ரசிகர்கள் இந்த நாளை பலவிதங்களில் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் அஜித்தின் நல் உள்ளத்தை வியந்து பாராட்டுகின்றனர். ட்விட்டரில் “25 years of Ajithism" ட்ரெண்டிங்.
நடிகர் அருண் விஜய்,"25 வருடங்களாக எங்களை ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் பெருமையாக உள்ளது”, என பதிவிட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திம்மக்குடியில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் முழு உருவச்சிலையை திறந்து, அஜித்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 1 லட்ச ரூபாய் செலவில் 20 நாட்களாக இரவு, பகலாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
சுமார் 4 அடி உயரம், 20 கிலோ எடை கொண்ட இந்த சிலையை காந்தியடிகள் சாலையில், இன்று நடிகர் இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார்.
’விவேகம்’ திரைப்படத்தில் அஜித்தின் தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஹரிபாபு என்பவர் வடிவமைத்துள்ளார்.