Fathima Babu Interview Bigg Boss 4 Tamil : மூன்று மாதக் காலத்திற்குத் தமிழ்நாட்டு மக்களை டிவி முன்பு கட்டிப்போடும் நிகழ்ச்சி பிக் பாஸ். சிரிப்பு, அழுகை, கோபம் என எல்லா எமோஷன்களும் இயல்பாகச் சங்கமிக்கும் இந்த ரியாலிட்டி ஷோ பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் உண்டு. அந்த வரிசையில் கடந்த சீசனில் கலந்துகொண்டு தனக்கென தனி இடம் பதித்த ஃபாத்திமா பாபு, பிக் பாஸ் சீசன் 4 பற்றி தன்னுடைய பார்வையை நம்மோடுப் பகிர்ந்துகொண்டார்.
“எனக்கு டிவி பார்க்கவே சுத்தமா பிடிக்காது. அதையும் மீறி நான் பார்க்கும் ஒரேயொரு நிகழ்ச்சி பிக் பாஸ் மட்டும்தான். அதிலும் சீசன் 4 முதல் நாளிலிருந்து பார்த்துட்டு இருக்கேன். பார்ப்பது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் ஷோவின் விமர்சனத்தை என்னுடைய யூடியூப் சேனலில் பதிவு செஞ்சிட்டும் இருக்கேன். அந்த அளவிற்கு இந்த ஷோவும் சரி இந்த சீஸனும் சரி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” எனப் பேச ஆரம்பித்தவரோடு பல கேள்விகளை முன்வைத்தோம்
“இந்த சீசனில் உங்களுடைய ஃபேவரைட் போட்டியாளர் யார்?”
“பாலா. என்ன நடந்தாலும் தன்னுடைய இயல்பை மாதிக்காம அவராகவே இருக்கிற விதம் ரொம்பப் பிடிக்கும். இந்தக் கால நடைமுறையில் மனசுல பட்டதை அப்படியே சொல்லுறதும் அதை ஏத்துக்குறதும் ரொம்ப கஷ்டம். ஆனா, இதை இரண்டுமே பாலா செஞ்சிட்டு இருக்காரு. எல்லோரும் சேர்ந்து ஒருத்தரை ஒதுக்கினாலும், அதை எப்படி தைரியமா எதிர்கொள்ளணும்ங்கிறதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பாலா. அவருடைய ப்ளஸ் ‘கான்ஃபீடென்ட்’ அவருடைய மைனஸ் ‘ஓவர் கான்ஃபீடென்ட்’. அவரிடமிருந்து நாம் எல்லோரும் கற்றுக்கொள்வதுக்கு நிறைய இருக்கு”
“ஆனால் கடந்த வாரங்களில் லக்ஜூரி டாஸ்க் மதிப்பெண்கள் அவரால் பறிபோனதே!”
“‘எனக்கு இவர்கள் பிடிக்கல, அதனால் லக்ஜூரி பட்ஜெட்ட போகவைப்பேன்’னு அவர் எதுவும் பண்ணல. பாலாவா பண்ணுன ஒரு விஷயம் பட்ஜெட்டை இழக்க வெச்சிருக்கு அவ்வளவுதான். மணிக்கூண்டு டாஸ்க்குல அவ்வளவு பெரிய ட்ரெயினை தள்ளியது பாலாதான். பிடிக்கலைனு நெனச்சிருந்தா கண்டிப்பா பாலா இந்த டாஸ்க்குலாம் பண்ணனும்னு அவசியமே இல்லை.”

“ரம்யா பற்றிய உங்களுடைய பார்வை?”
“எந்தவித குறையும் சொல்ல முடியாத போட்டியாளர். தெளிவான பார்வை இருக்கிற புத்திசாலி, ரம்யா. அவரிடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம், சிரிச்சிக்குட்டே ஊசி ஏத்துற விஷயம்தான். மற்றவர்களைப் பற்றி நெகட்டிவ் கமென்ட், சம்பந்தப்பட்ட நபர் இல்லாதபோது சொல்லுவது தவறான செயல். அதை நேருக்கு நேரா அவர்களிடமே சொல்லும் தைரியம் இருந்தும் ரம்யா இப்படிச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”
“ஷிவானி-பாலா ரொமான்ஸ் பற்றி?”
“தங்களுக்குள் காதல் உறவு எதுவுமில்லை என்பதைப் பலமுறை பாலா சொல்லியிருக்கிறார். தன்னைப்பற்றி என்னவேனா சொல்லுங்க, ஆனா, அந்த பொண்ண பத்தி எதுவும் சொல்லாதீங்க என்பதையும் பதிவு செய்திருக்கிறார். அப்படியே அவர்களுக்குள் காதல் உரையாடல்கள் ஏதாவது இருந்திருந்தால் கண்டிப்பா நமக்கு பிக் பாஸ் போட்டு காட்டியிருப்பார். அதை மறைக்கணும்னு எந்தவித அவசியமும் இல்லை. அதனால், அவர்களுக்குள் ரோமன்ஸ் இப்போதைக்கு இல்லை. சாதாரணமாகவே நம் தோழியோ நண்பரோ மூன்றாம் நபரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகினால் நமக்குப் பிடிக்காது. அதுபோன்ற பொசஸிவ்தான் இருவருக்குள்ளும் இருக்கு. இருவருக்கும் ஈர்ப்பு இருக்கிறதே தவிர ரொமான்ஸ் இல்லை”

“‘சுமங்கலி’ வார்த்தையை வைத்து சுரேஷ் – அனிதாவின் பிரச்சனை பற்றிய உங்கள் கருத்து?”
“தாயால் தனியாக வளர்க்கப்பட்டவர்தான் சுரேஷ். அவருக்கு நிச்சயம் அதன் வலிகள் புரிஞ்சிருக்கும். இருந்தாலும் அந்த நேரத்துல ரியாக்ட் பண்ணிட்டாரு. என்னதான் பிரச்சனை நடந்தாலும், சுரேஷ் சாரை ரொம்ப மிஸ் பண்ணுறேன்னு அனிதாவே சொல்லியிருக்காங்க. யாராலும் ஒதுக்கப்படமுடியாத மனிதர்தான் சுரேஷ். இங்க யாரும் நிரந்தர எதிரியும் இல்ல நண்பரும் இல்ல. அதனால அதையே மனசுல வெச்சுட்டே இருக்கிறது நல்லதில்ல”
“வீட்டிற்குள் ஆரி எப்படி இருக்கிறார்?”
“அவரைப் பற்றி சொல்ல ஒரேயொரு பாயின்ட் போதும். வெளியில 2653 நாட்டு விதைகளை நட்டு வைப்பது முக்கியமல்ல, இங்கு வீட்டுல தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு செடியை என்ன செஞ்சாருங்குறதுதான் முக்கியம். அவருக்குக் கொடுத்த செடி எது என்பதுகூட தெரியலைனா வெளியில செஞ்சது எல்லாம் வெறும் விளம்பரத்துக்கும் சாதனைக்கும்தானோனு சந்தேகம்தான் வருது. அட்வைஸ் கொடுக்குறவரு அதை எந்த அளவுக்கு ஏத்துக்குறாரு? ஆனால், வெளியில் அந்த அளவிற்கு சப்போர்ட் இருக்கு. அதற்குக் காரணம் சோஷியல் சர்வீஸ் மட்டும்தானே தவிர வீட்டிற்குள் இருக்கும் ஆரிக்கு அல்ல”
“சீக்ரெட் ரூமுக்கு யாரை அனுப்பலாம்?
“அந்த அளவிற்கு இந்த சீசனில் யாரும் இல்ல”

“உங்கள் பார்வையில் இந்த சீசன் வெற்றியாளர் யாராக இருப்பார்கள்?”
“ரம்யா பாண்டியன், பாலாஜி, ஆரி, கேபி, சம்யுக்தா, சோம் இவர்களில் யாராவது ஒருவர் நிச்சயம் வருவாங்க. சம்யுக்தா வெற்றிபெற்றால் நல்லா இருக்கும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”