பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: காலா, மெர்சல் படப்பிடிப்புகள் பாதிப்பு

பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், காலா, மெர்சல் உள்ளிட்ட திரைப்படப் பிடிப்புகள் பாதிப்படைந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

பெப்சி தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா, இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படப் பிடிப்புகள் பாதிப்படைந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. பயணப்படி, சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில், படப்பிடிப்புகளை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், பயணப்படி உள்ளிட்ட சம்பள விவகாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து நடைபெற்ற பெப்சியின் அவசர பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுவிதிகள் கையெழுத்தாகி புத்தகாமாக அச்சிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். பெப்சி அமைப்பில் உள்ள சுமார் 23,000 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா, இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படப் பிடிப்புகள் பாதிப்படைந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு தங்கு தடையின்றி, வேறு சினிமா தொழிலாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close