தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து, கே.இ.ஞானவேல் ராஜா திடீரென விலகியுள்ளார்.
நடிகர் சங்க செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இதை எதிர்த்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் சேரன். அவருக்கு ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்த கே.இ.ஞானவேல் ராஜா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் உறவினரான ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்து வருகிறார்.
ராஜினாமா குறித்து ஞானவேல் ராஜாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் ஞானவேல் ராஜா போட்டியிட இருப்பதாகவும், விதிகள்படி ஒரு சங்கத்தில் பதவியில் இருப்பவர் இன்னொரு சங்கத்தில் போட்டியிட முடியாது என்பதால் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் 24ஆம் தேதி விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அப்புறம் எப்படி விஷால் மட்டும் இரண்டு சங்கங்களில் பதவி வகிக்கிறார்? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...