கோவா சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று மாலை தொடங்குகிறது.
‘இந்தியன் பனோரமா’ என்று அழைக்கப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா, இன்று தொடங்கி 8 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. 48வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழா, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருக்கிறது.
82 நாடுகளைச் சேர்ந்த 196 படங்கள் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இதனால், உலகம் முழுவதும் இருந்து இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். 30 பெண் இயக்குநர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது, இந்த வருட சிறப்பு.
‘சலங்கை ஒலி’, ‘சங்கரா பரணம்’ போன்ற படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் படங்களும், ஜேம்ஸ் பாண்ட் படங்களும் சிறப்புப் படங்களாகத் திரையிடப்படுகின்றன. ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் முதல் படமான ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படமும் சிறப்புப் படமாக திரையிடப்படுகிறது.
இதுதவிர, 10 ஆசியப் படங்களின் முன்னோட்டக் காட்சிகளும், 64 இந்தியப் படங்களும் முன்னோட்டக் காட்சிகளும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன. இந்த விழாவின் இறுதி நாளில் ‘சிறந்த திரைப்பட ஆளுமை’க்கான விருது, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட இருக்கிறது. திரைப்பட விழாவை முன்னிட்டு கோவாவில் சினிமா ரசிகர்கள் குவிந்துள்ளனர்.