குலேபகாவலி எனும் ஊரில், கோயில் மதில் சுவருக்கு அருகில் புதையல் இருப்பதாக வயதான பெரியவர் ஒருவர் கூறிவிட்டு இறந்துவிடுகிறார். அவர் மகனான வில்லன், தன் மச்சானான இன்னொரு வில்லன் மூலம் அந்தப் புதையலை எடுக்க மூன்று பேரை அனுப்புகிறார். அவர்கள் மூன்று பேருமே திருட்டுத் தொழில் செய்பவர்கள்.
அவர்கள் போகும்போது எக்ஸ்ட்ராவாக இன்னொருவரும் இணைந்து கொள்கிறார். அவரும் திருடர் தான். நான்கு திருடர்களும் சேர்ந்து அந்தப் புதையலை எடுத்தார்களா? அவர்களுக்கு என்ன ஆனது? என்பதுதான் ‘குலேபகாவலி’ படத்தின் கதை.
கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் இந்தப் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஹீரோயினாக ஹன்சிகா நடிக்க, ரேவதி, ஆனந்த ராஜ், முனீஷ்காந்த், யோகிபாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மன்சூர் அலிகான், மதுசூதனன் ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் காமெடிப் படமான இதில், காமெடி மட்டுமே இருக்கிறது. யோகிபாபு, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என 4 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஹீரோ, ரேவதி தான். ஒவ்வொரு காரைத் திருடும்போதும் அவர் நடிப்பு அற்புதம். அவருக்கு ஒரு அழுகாச்சியான ஃப்ளாஷ்பேக் சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால், அதையும் கப்ஸாவாக்கி சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இந்த வயதிலும் கடினமாக உழைத்திருக்கிறார்.
பிரபுதேவாவுக்கு, ஹீரோவாக இந்தப் படத்தில் ஒன்றும் இல்லை. ஏழெட்டு பேரில் ஒருவராகவே அவருடைய கேரக்டரும் படைக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக சில பாடல்களும், இரண்டு ஃபைட்டும் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவுதான். கொஞ்சம் மாறுபட்ட கேரக்டரில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
விவேக் - மெர்வின் இருவரின் இசையில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட, பின்னணி இசை ஓகே ரகத்தில் இருக்கிறது. ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் பல காட்சிகள் கண்களுக்கு அருமையாக உள்ளன. காமெடி மட்டும் போதும் என்று நினைத்து இன்னும் கொஞ்சம் நகைச்சுவையுடன் இந்தப் படத்தை எடுத்திருந்தால், வயிறு வலிக்கச் சிரித்திருக்கலாம். ஆனால், தற்போது வாய்விட்டு மட்டுமே சிரிக்க முடிகிறது.