/indian-express-tamil/media/media_files/2025/10/10/kandhan-malai-2025-10-10-14-42-33.jpg)
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘கிடுகு’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் வீர முருகன். கல்லூரி வினோத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக யூடியூப்பில் வெளியானது. இதையடுத்து, இயக்குநர் வீர முருகன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘கந்தன் மலை’.
இந்த படத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் ’கந்தன் மலை’ திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் எச்.ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர்.
இந்நிலையில், ‘கந்தன் மலை’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சாவர்க்கரின் வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த டீசரில் ’கத்தி நீங்க குத்துனா தான் குத்தும் இல்ல. நாங்க குத்துனாலும் குத்தும். உங்களால கந்தன் மலை இல்ல எதையும் புடிங்க முடியாது’ போன்ற டயலாக்கை எச். ராஜா பேசியுள்ளார். மேலும், ஒரு காட்சியில் பெண் ஒருவர் ’எங்க அண்ணன் அடக்குனா அடங்கக்கூடாது என்று சொல்லி வச்சிருக்கார்’ என்று சொல்கிறார். அதற்கு எச்.ராஜா ’அடங்கமறு அத்துமீறு அந்த கும்பலா’ நீங்க என்று கூறுகிறார்.
எச்.ராஜாவின் அரசியல் ரீதியாக கருத்துகள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த டீசரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ‘கந்தன் மலை’ திரைப்படத்தின் டீசர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளிப்படையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வீர முருகன், “ படத்துல எச்.ராஜாவிற்கு ஒரு ஜோடி இருக்கிறார்கள். அதுக்கு ஆடிசன் வைக்கலாம் என்று நினைட்து அவரிடம் கேட்டபோது நம்மை ட்ரோல் செய்வாங்க என்றார். படத்துல ஹீரோயின் அவசியம் இருந்தே ஆக வேண்டும் என்றால் நான் சொல்பவர்களை ஆடிசன் செய்யுங்கள் என்று அவரது மனைவியை அழைத்து வந்தார். எச்.ராஜாவிற்கு ஜோடியாக அவரது மனைவி தான் நடித்துள்ளார் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.