சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் முதன்மையாக தென்னிந்திய படங்களில் பணிபுரிந்து வந்ததால் வடிவமைப்பாளர்கள் தனக்கு ஆடைகள் வழங்க மறுத்துவிட்டனர் என நடிகை ஹன்சிகா மோத்வானி கூறினார்.
ஹன்சிகா மோத்வானி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலின், சுந்தர்.சி, சிம்பு, சித்தார்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.
இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் நண்பர், தொழில் அதிபரானசோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹன்சிகா குல்டே.காம் (Gulte.com) தளத்திற்கு அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தான் முன்பு தென்னிந்திய படங்களில் அதிகம் நடித்து வந்ததால் வடிவமைப்பாளர்கள் தனக்கு ஆடைகள் வழங்க மறுத்தனர் எனக் கூறினார். ஆனால் இப்போது அவர்களே என்னிடம் வந்து ஆடைகள் கொடுக்கின்றனர். என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறுகின்றனர் என்றார்.
ஹன்சிகா பேசுகையில், "முன்பு பல வடிவமைப்பாளர்கள் ஓ, நீங்கள் தென்னிந்திய நடிகையா? நாங்கள் உங்களுக்கு ஆடைகளை வழங்க விரும்பவில்லை. என்றனர். ஆனால் இப்போது, அவர்களே வந்து உங்கள் படம் வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டு விழா உள்ளது. ஏன் நீங்கள் எங்கள் ஆடையை அணியக்கூடாது?’என்று கேட்டனர். நான் அதற்கு பணிவுடன் சரி என்று சொன்னேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா?
அவர்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று கூறிய ஹன்சிகா, நான் கடினமாக உழைக்கிறேன். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று தெரியும். அதேபோல் அவர்கள் திரும்பி வந்தனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் எந்த மொழி படங்களில் நடித்தாலும் நான் ஒரு இந்திய நடிகையாகவே கருதுகிறேன். நான் இந்திய சினிமாவில் வேலை செய்கிறேன். நான் ஒரு இந்திய நடிகை. இதை தான் நான் எப்போதும் கூறுவேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“