அஜித்.... தன் இளமையில் செய்த தவறு!

அதன்பின் தான் ஒட்டுமொத்த பார்வையையும் தன் மீது திரும்ப வைத்தார், தன் மதிப்பை பல மடங்கு உயர்த்தினார்..

சோற்றை உற்பத்தி செய்பவனும் உழைப்பாளி தான், அந்த சோற்றை ருசியாக சமைப்பவனும் உழைப்பாளி தான். உழைத்துக் களைத்து பசியோடு வந்து அந்த சோற்றை உண்பவனும் உழைப்பாளி தான். அனைவருக்கும், இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்…

எல்லோரும் வாழ்க்கையில் உழைக்குறாங்க. ஆனா, அந்த உழைப்பின் போது நமக்கு ஏற்படும் சில தோல்விகள், அவமானங்கள், துன்பங்கள், நம்பிக்கை துரோகங்கள் என அனைத்தையும் எவன் ஒருவன் முறியடிக்கின்றானோ அல்லது பயந்து ஒளியாமல் எதிர்த்து நின்று சமாளிக்கிறானோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன் ஆகிறான். அவன் எந்தத் துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி.

சினிமாத்துறையைச் சேர்ந்த அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றித் தான் நாம் இப்போது பேச இருக்கிறோம். அவர் பெயர் அஜித்குமார். ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ‘தலைக்கனம்’ இல்லாத நபர். இன்று அவருக்கு பிறந்தநாள். இந்த நாளில் அவரைப் பற்றி பேசினால், அது மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

அஜித் தன் இளமையில் செய்த தவறு:

இல்லை… தவறாக்கப்பட்ட ஒன்று. எப்போதும் மனதில் தோன்றுவதை பளிச்சென்று பேசிவிடும் அஜித், தனது சினிமாப் பயணத்தின் போது கொடுத்த சில பேட்டிகளால் அவர் தலைக்கனம் பிடித்தவர் என்றும், அதற்குள் உச்ச இடத்திற்கு வர பேராசைப்படுகிறார் என்றும் பேச்சுக்கள் சித்தரிக்கப்பட்டு கிளம்பின. அவர் மறுப்புத் தெரிவித்தும் அவரது பெயருக்கு சிறிது களங்கம் விளைவிக்கும் விஷயமாக அது ஆகிப்போனது. அப்போது தான் அவர் சில விஷயங்களை தன்னிலையில் உணருகிறார். அதன் வெளிப்பாடுதான் அதற்கு பின் அஜித், மீடியா பக்கமே வராமல் போனதற்கு காரணம்.

உழைப்பாளர் தினத்திற்கும் இந்தப் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தமென நினைக்க வேண்டாம். தெரிந்தோ, தெரியாமலோ தன்னால் ஒரு பிரச்சனை ஏற்பட்டதால், தன்னுடைய தொழிலுக்கோ, தன் குடும்பத்திற்கோ எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு பின் குறிப்பிட்ட காலம் வரை, பத்திரிக்கையிடம் முகத்தைக் கூட காட்டாமல், தான் உண்டு, தன் வேலையுண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருந்து வந்தார் அஜித்.

தன் மதிப்பை உயர்த்திய அஜித்:

இங்கேதான் நாம் ஒரு விஷயத்தை உளவியல் ரீதியாக யோசித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து அந்தப் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், அவர் ஒதுங்கிவிட்டதால், அந்தப் பிரச்சனையும் நாளடைவில் ஒதுங்கிப் போனது. அதற்கு பின், சினிமாவைத் தவிர அவரை வேறு எங்கேயும் பார்ப்பது அரிதாகிப் போனதால், யாரெல்லாம் தன்னை விமர்சித்தார்களோ, அத்தனை பேரையும் அஜித்தை சந்திப்பது அரிது, அஜித்தைப் பார்ப்பது அரிது, அஜித்தை அவ்வளவு சீக்கிரம் நெருங்கிட விட முடியாது என சொல்ல வைத்தார். தங்களுக்கு பிடித்தமான ஒரு நடிகனை பார்க்க முடியாமல் ரசிகர்களை ஏங்க வைத்தார். ஒட்டுமொத்த பார்வையையும் தன் மீது திரும்ப வைத்தார், தன் மதிப்பை பல மடங்கு உயர்த்தினார் வைராக்கியமாக.

இன்று அஜித்தை சினிமாவைத் தவிர வேறு எங்கேயும் நாம் பார்க்க முடியாது. ரசிகர்கள் அவர்களைக் காண தவம் இருக்கத் தொடங்கிவிட்டனர். அவர் நின்றால் வைரல், கண் அசைத்தால் வைரல், சிரித்தால் வைரல் என்று அவரைச் சுற்றிய அனைத்தும் வைரலாக மாறுகிறது. கடுமையாக உழைப்பவன் தன் மீது எழும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது? அதோடு மட்டுமில்லாமல், விமர்சித்தவர்களுக்கு தன் மதிப்பை உணர்த்துவது எப்படி? என்பதை நாம் அஜித்குமார் எனும் மனிதனிடம் இருந்து தாராளமாக கூச்சமின்றி கற்றுக் கொள்ளலாம். அஜித் முதலில் மனிதர்..அப்புறம் தான் நடிகர்….

அஜித்திடம் நாம் கற்க வேண்டிய மற்றொரு விஷயம் உண்மை. வேறு முகம் கொண்டு சொன்னால் நேர்மை… ஒருவன் எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும், இந்த இரண்டும் இல்லையெனில், ஒருநாள் நிச்சயம் செல்லாக்காசாகிப் போவான். காசு இருந்தும் பிச்சைக்காரனாய் வாழ்வான். இந்த இரண்டும் அஜித்திடம் நிறைய இருப்பதால் தான், சினிமாவைத் தாண்டி, அவரை ரசிகர்கள் காதலிக்கின்றனர். அவரைப் பிடிக்காத இளைஞர்களும் இந்த குணத்தை ஆமோதிக்கின்றனர்.

போஸ்டர் ஓட்டுவது, பாலாபிஷேகம் செய்வது, வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் அடித்துக் கொள்வது என்றில்லாமல், அஜித்திடம் உள்ள இந்த நற்பண்புகளை பின்தொடர்ந்தால், அஜித் உண்மையில் மனமகிழ்வார். அது அவருக்கும் பெருமை, ‘தல’ ரசிகன் என்று சொல்லும் உங்களுக்கும் பெருமை.

இந்த உலகில் எல்லோருக்கும் ஒரு இன்ஸபிரேஷன் தேவை. தன்னை எதிர்ப்பவர்களை மவுனத்தால், பொறுமையால், அன்பால் எப்போதும் வெல்லும் அஜித்தை இன்ஸ்பிரேஷனாக நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த தகுதி அவருக்கு உள்ளது.

×Close
×Close