Happy Birthday Director Shankar: தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் அனைவருக்குமே குறிப்பிட்ட சில இயக்குநர்களின் படத்தில் நடித்து விட வேண்டும் என்ற வேட்கை நிச்சயம் இருக்கும்.
அப்படியான இயக்குநர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர். ஆரம்பத்தில் நடிகராக விரும்பிய ஒருவர், இன்று இயக்குநராக எட்டியிருக்கும் உயரம் அவர் தனது படைப்பின் மீது வைத்துள்ள காதலைக் காட்டுகிறது. சினிமாவில் பிரமாண்டம், ரிச்சான காட்சிகள் மற்றும் சமூக கருத்துகள் என்றாலே இயக்குநர் ஷங்கர் தான் முதலில் நினைவுக்கு வருவார்.
2.0 படபிடிப்பில்...
ஆக்ஷன் ஹீரோ, சமூக கருத்து என ’ஜென்டில் மேன்’ (1993) படத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், காதலுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடிய கல்லூரி மாணவனை மையமாக வைத்து ’காதலனை’ இயக்கினார். முதல் படத்தில் அர்ஜூன், இரண்டாவது படத்தில் பிரபு தேவா என ஷங்கரின் ஆரம்ப கால தேர்வே அமர்க்களமாக அமைந்தது. இதன் பலனாக இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட். இரண்டு வெற்றிகளும் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றன. ஏனெனில் உலாக நாயகன் கமல்ஹாசனுடன் ஷங்கர் இணைந்ததற்கு முதல் இரு படங்கள் கொடுத்த வெற்றியும் முக்கியக் காரணம். ஊழலுக்கு எதிரான சமூக செய்தியுடன் ஒரு பிளாக்பஸ்டராக ’இந்தியன்’ படம் அமைந்தது. அடுத்து அவர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ பொதுவான கமர்ஷியல் காதல் கதையை களமாகக் கொண்டிருந்தது.
இந்தியன் படபிடிப்பில்...
பின்னர் ஷங்கரின் படைப்பில் மற்றொரு முக்கியமான படம் வந்தது. அந்தப் படம் ‘முதல்வன்’. அர்ஜூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் "ஒரு நாள் முதல்வர்" என்ற தனித்துவமான கருப்பொருளுடன் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அரசியல்வாதிகளின் கோபத்தை அதிகம் சம்பாதித்தது. சில பல சிக்கல்களால் ’முதல்வன்’ படத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரால் இந்தப் படத்தில் இடம்பெற முடியவில்லை என்றபோதிலும், முதல்வன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு படைப்பாளியாக மீண்டும் தனது திறமைகளை உறுதிப்படுத்தினார் ஷங்கர்.
பின்னர் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, ‘பாய்ஸ்’ படத்தை இயக்கினார். இது இளைஞர்களைக் கவர்ந்தது. பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பல ஆளுமைக் கோளாறு பிரச்னையை மையமாக வைத்து ‘அந்நியன்’ படத்தை இயக்கினார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜியில் பணியாற்றினார். இந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்து ‘எந்திரன்’, ‘2.0’ ஆகியப் படங்களிலும் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.
நண்பன் படபிடிப்பில்...
ஒவ்வொரு திரைப்படத்திலும், தன்னை மறுவரையறை செய்து மென்மேலும் சிறந்து விளங்க முயற்சி செய்து வரும் ஷங்கர், ஒருபுறம் சமூக ரீதியான செய்திகளைக் கொண்ட பொழுதுபோக்கு படம், மறுபுறம் பிரமாண்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய படம் என்று படைப்புகளில் வித்தியாசம் காட்டுகிறார்.
23 ஆண்டுகள் கழித்து, தற்போது ’இந்தியன் 2’ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்ஹாசனுடன்இணைந்துள்ளார் ஷங்கர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தத் தருணத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது ஐ.இ.தமிழ்!