HBD GV Prakash: இயக்குநர் ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ என்ற பாடலின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.
பின்னர் தனது மாமாவும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில ப்ராஜெக்டுகளில் வேலை செய்தார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் வேலை செய்ததோடு, ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் தலா ஒரு பாடல் பாடினார்.
இதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் உருவான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருந்த அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிறகு ஏ.எல்.விஜய்யின் ’மதராச பட்டினம்’ படத்தின் பாடல்களும் வெற்றி பெற்றன. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற பாடலை அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளின் படங்களுக்கு இசையமைத்தார் ஜி.வி. இவருடைய படங்களில் இடம்பெறும் மெலடி பாடல்கள் சிறப்பு கவனம் பெறும். எப்போது கேட்டாலும் திகட்டாத தன்மையை அந்தப் பாடல்கள் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
இதற்கிடையே 2015-ம் ஆண்டு ’டார்லிங்’ படத்தின் மூலம் ஹீரோ அவதாரத்தையும் எடுத்தார் ஜி.வி.பிரகாஷ். ஹாரர் காமெடி களத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வெளியான சில படங்கள் நன்றாக ஓடாத நிலையில், இயக்குநர் பாலாவில் ’நாச்சியார்’ படத்தில் ஜி.வி-யின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது ’100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள்’ எனப் பல படங்களில் நடித்து வருகிறார்.
தவிர, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, தனுஷின் ‘அசுரன்’ ஆகியப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையே சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இசை, நடிப்பு, சேவை என படு பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஜி.வி-யின் திரைப்பயணம் முழுக்க வெற்றிகளை குவிக்க ஐ.இ தமிழின் வாழ்த்துகள்!