விஜய்.... இன்றைய தேதியில் வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாயகன். இன்று (ஜூன்.22) தனது 46வது பிறந்தநாளை கடந்து செல்கிறார்
உபயம் - கொரோனா
ஆம்.. மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா கொடுமையில், தனது பிறந்தநாளில் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என ரசிகர் மன்றங்கள் வாயிலாக தெரிவித்துவிட்டார்.
எனினும், பிறந்தநாள் அதுவுமாக, அவருடைய ஹிஸ்டரியை ரீவைண்ட் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா என்ன....
வாங்க, டைம் மெஷினில் அப்படியே கொஞ்சம் பின்னோக்கி போகலாம்.
மாஸ்டர் விஜய் 'டூ' இப்பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய் வரை:
மாஸ்டர் விஜய் என்றதும், லேட்டஸ்ட் பீஸ் என்று நினைத்துவிட வேண்டாம். முதன் முதலாக 1984ம் ஆண்டு 'வெற்றி' எனும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையில் அறிமுகம் செய்யப்பட்டார் விஜய்.
1988 வரை குழந்தை நட்சத்திரமாக, பவுண்டரி லைனுக்கு வெளியே பந்து எடுத்து போட்டுக் கொண்டிருந்த விஜய், 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம், கிரவுண்டிற்குள் களமிறக்கப்பட்டார்.
பிறகு செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு என்று மீசை கூட சரியாக முளைக்காத வயதில் ஷேவாக் போன்று அதிரடிக்கு ஆசைப்பட்டு, அனைத்துப் போட்டிகளிலும், குறைந்தபட்சம் சர்க்கிலுக்கு வெளியே கூட அடிக்க முடியாமல், கேட்ச் கொடுத்து வெளியேறிக் கொண்டிருந்தார்.
டிராவிட் ஸ்டிராடஜி
1996ம் ஆண்டு விக்ரமனின் ஆலோசனையின் பேரில், டிராவிட் போன்று நிறுத்தி நிதானமாக விஜய் ஆடிய சாஃப்ட் இன்னிங்ஸ் 'பூவே உனக்காக' மெகா ஹிட் அடித்தது.
முதன் முதலாக, விஜய் எனும் நடிகனின் படத்தைப் பார்க்க மக்கள் மனமுவந்து தியேட்டரை நோக்கி கால் நகர்த்தினர்.
பிறகு மீண்டும், மாண்பிமிகு மாணவன், செல்வா என்று வந்தவுடன் பெவிலியன் திரும்ப, 1997ம் ஆண்டு வெளியான ஃபாசிலின் 'காதலுக்கு மரியாதை', மற்றொரு சதமாக அமைந்தது. அதுவும் டபுள் செஞ்சுரி. மக்கள், முழுமையாக விஜய்யை ஏற்றுக் கொண்ட படம் இது எனலாம்.
பிறகு, மீண்டும் டிராவிட் ஸ்டிராடஜியில், 1999ல் 'துள்ளாத மனமும் துள்ளும்' எனும் தாறுமாறு வெற்றியைக் கொடுக்க, விஜய்க்கு என தனி மார்க்கெட் உருவானது.
2000-க்கு பிறகு, டிராவிட் ஸ்டிராடஜி ஆட்டத்தில் சற்று ஷேவாக்கையும் மிக்ஸ் செய்ய ஆரம்பித்தார் விஜய். இது முழுக்க முழுக்க விஜய்யின் அசாத்திய நம்பிக்கை + முயற்சி எனலாம்.
குஷி, பிரியமானவளே, பிரெண்ட்ஸ், பத்ரி என்று காதலுடன் தனக்கு பிடித்த ஆக்ஷனையும் உள்ளே கொண்டு வந்தார். அது மக்களுக்கு பிடித்தும் போனது.
பிறகு, அந்த பார்முலாவிலும் ஷாஜஹான், பகவதி, புதிய கீதை என்று சறுக்க, மீண்டுமொரு மெகா ரிஸ்க் எடுக்கிறார் விஜய். அல்லது வேறு வழியின்றி ரிஸ்க் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் என்று சொல்லலாம்.
மாஸ், பன்ச், ஆக்ஷன்
2003ல் திருமலை..... ரமணா இயக்கத்தில், முழு ஷேவாக்காக விஜய் தன்னைத் தானே செதுக்கிய படம் இது. வசூல் மாஸ். படம் சூப்பர் ஹிட். விஜய்யை ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள், குறிப்பாக அவரது பன்ச் டயலாக்கையும் ஏற்றுக் கொண்டார்கள்.
எந்த ஒரு ஹீரோவும் மாஸ் படம் கொடுக்கலாம். அது ஹிட்டும் ஆகலாம். ஆனால், ரஜினி, விஜயகாந்த் போன்ற மிக மிக சிலரைத் தவிர பன்ச் டயலாக் பேசிய பெரும்பாலான ஹீரோக்களை மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் காமெடி பீஸ் ஆக்கிவிட்டுவார்கள்.
ஆனால், இங்கு விஜய் அதற்கு விதிவிலக்கான ஹீரோவானார்.
அடுத்து, 2004ல் வெளிவந்தது விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக் 'கில்லி'. அத்தனை ரெக்கார்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. வசூலில் விஜய்யை ரஜினிக்கு அடுத்த இடத்தில் அமரவைத்தது இப்படம். அந்த பிரம்மாணட வெற்றியை விஜய் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என்று வசூல் ரீதியிலும், ரசிகர் படையிலும் தன்னை ஒரு பேராதிக்க சக்தியாக நிரூபித்துக் கொண்டே வந்தார் விஜய்.
இன்னும், வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், கமல் கூட ரஜினி படங்களின் வசூலை நெருங்க முடியாமல் இருந்த போது, ரஜினியே 'இந்த பையன் மட்டும் நம்ம லைன்ல அடிக்கடி கிராஸ் பண்ணிட்டே இருக்கானே' என்று எண்ண வைத்தவர் விஜய் என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
ஏனெனில், விஜய் படங்களின் வசூல் அத்தகையது. எப்படியும் கடைசி முட்டை போண்டா வரை விற்றுவிடலாம் என, தியேட்டர் கேண்டீன் ஊழியர்களை ரஜினிக்கு பிறகு முழுமையாக நம்ப வைத்த ஒரே நடிகர் விஜய் மட்டுமே.
ஆனால், பெரும் திருஷ்டியாக, 2007-ல் அழகிய தமிழ் மகனில் தொடங்கிய அவரது தோல்விப் பயணம் முற்றுப் பெற 2011ல் 'காவலன்' ரிலீஸ் வரை அவர் காத்திருக்க நேரிட்டது. முழுமையாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஒரு வெற்றிப் படத்தை கூட விஜய் கொடுக்கவில்லை.
ஆனால், ஆச்சர்யம் என்னவெனில், இந்த நான்கு ஆண்டுகளில், அவரது ரசிகர் பலம் மேலும் மேலும் வலுப் பெற்றுக் கொண்டு இருந்ததே தவிர, துளி கூட குறையவில்லை. இதையும் விஜய் எதிர்பார்க்கவில்லை.
2011ல் 'வேலாயுதம்' படத்தின் மூலம், சற்றே அவர் நிம்மதி மூச்சு விட, 'நண்பன்' விஜய்க்கு கைக் கொடுத்தான். (நண்பன் எங்கயும் நம்மை விட்டுக் கொடுக்க மாட்டான் போல...)
வசூல் சக்கரவர்த்தி
பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012ல் வெளிவந்தது துப்பாக்கி. தனது கடைசி நான்கைந்து ஆண்டு தவ வாழ்க்கைக்கு வட்டியும் முதலுமாக அறுவடை செய்தார் விஜய். இன்ச் இன்ச்சாக அப்படத்தின் விஜய்யை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள்.
பிறகு 'கத்தி' படத்தில் கூர்மையாக இருந்தாலும், தெறி, மெர்சல், சர்க்கார், பிகில் என்று தன்னை ஒரு வசூல் பிம்பத்துக்குள் நிலைநிறுத்திக் கொண்டார் விஐய். உண்மையில், கத்தி தவிர, இந்த நான்கு படங்களும் வெற்றிப் படங்களா என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், ரசிகர்கள் விஜய்யை கொண்டாடினார்கள், அது மட்டும் உண்மை.
இப்போது 'மாஸ்டர்' ரிலீசுக்காக, விஜய் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
அவமானம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வலி, கண்ணீர்
தன்னை நோக்கி வந்த இந்த ஐந்து அம்சங்களையும் வரவேற்று, நட்பாக்கி, கைகளில் ஏந்தி, அரவணைத்து, முத்தமிட்டு, தோளில் சுமந்து, நெஞ்சில் நிலைநிறுத்தி, இன்று 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று அவர் சொன்னாலே, ரசிகர்களின் கரகோஷமும், விண்ணைப் பிளக்கும் விசில் சப்தமும் அடங்க வெகு நேரம் பிடிக்கும் அளவுக்காண உயரத்தை தொட்டிருக்கிறார் என்றால், அது எத்தகைய சாதனை!
ஹேப்பி பர்த்டே மிஸ்டர்.விஜய்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.