Happy Birthday Chiyaan Vikram: ஒரு படம் நடித்து விட்டாலே, தனக்கு சினிமாவில் எல்லாம் தெரியும் என்பது தான் பலரின் ஆழ்மனது ஓட்டமாக இருக்கும்.
நடிகருக்காக கதையை மாற்றும் நிறைய இயக்குநர்களும், மாற்ற சொல்லும் நிறைய நடிகர்களும் இங்கு ஏராளம். இந்தச் சூழலில், கதைக்காக தன்னை வருத்திக் கொண்டு, நடிக்கும் அற்புத கலைஞன் அவர். அவரால் ‘ராவணன்’ போல கட்டுமஸ்தான உடற்கட்டைக் கொண்டு வரவும் முடியும், சிக்கென இளைத்து கல்லூரி பையன் போல ‘ஸ்கெட்ச்’ போடவும் முடியும்.
குறிப்பாக சேது, காசி, சித்தன், ரெமோ, கிருஷ்ணா போன்ற கேரக்டர்களாக தன் வாழ்நாளின் பாதி நாட்களை செலவழிக்கத் தயங்காத ஒருவர் அவர். படம் வெற்றியோ தோல்வியோ, தனக்குக் கொடுத்த வேலையை செவ்வன செய்து அனைத்து பாலிலும் ‘சிக்ஸர்’ அடிப்பவர்.

இதற்கு மேலும் சஸ்பென்ஸ் (அப்படி ஒன்று இருந்தால்) வேண்டாம். ஆம் நடிகர் விக்ரம் தான் அந்த மகா கலைஞன்.
வருடத்திற்கு எவ்வளவோ பேர் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்கள், ஆனால் விக்ரம் போல் ‘ஹார்டு ஒர்க்’ செய்யும் இன்னொருவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்பதே நிதர்சனம்.
தான் பிறந்த பரமக்குடியிலிருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்த விக்ரமுக்கு முதலில் கிடைத்தது, சின்ன சின்ன சப்போர்ட்டிங் ரோல்கள் தான். அமராவதியில் அஜித் எப்படி நடிகராக அறிமுகமானாரோ, அதே படத்தில் தான் விக்ரமும் ‘டப்பிங் ஆர்டிஸ்டாக’ அறிமுகமானார்.

ஆம், அந்தப் படத்தில் அஜித்துக்கு குரல் கொடுத்தது விக்ரம் தான். தொடர்ந்து பிரபுதேவா, அப்பாஸ், வினித் என பல நடிகர்களுக்கு 15 படங்களுக்கு மேல் குரல் கொடுத்துள்ளார். ஒருபுறம் சிறிய வேடங்கள், மறுபுறம் ‘டப்பிங் ஆர்டிஸ்ட்’ என இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார் விக்ரம்.
பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே விக்ரமுக்கு நடிப்பின் மேல் அதிக ஆர்வம். அதனால் ஒரு போட்டி விடாது, எல்லாவற்றிலும் கலந்துக் கொள்வார்.
அந்த மாதிரி சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த ஒரு விழாவில் கலந்துக் கொண்டு சிறந்த நடிகர் விருதைப் பெற்ற விக்ரமின் மகிழ்ச்சி, சில நிமிடங்களிலேயே மயக்கமுற்றது. ஆம் விருதினைப் பெற்றுக் கொண்டு திரும்பிய விக்ரம் ஒரு ட்ரக்கில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவரது கால் மிகவும் பாதிக்கப் பட்டது. விக்ரமை காப்பாற்ற அந்த நேரத்தில் 23 சர்ஜரிகள் செய்யப்பட்டன. அதன் பிறகு வீட்டிலிருந்தே தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

உடல்நிலை சரியானதும் மீண்டும் தனது நடிப்பு வேட்டையை தொடங்கிய விக்ரம், முதன் முதலாக ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், நான்காவதாக அவர் நடித்த ‘மீரா’ படம் விக்ரமுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் இயக்கியிருந்தார். இருந்தாலும் எதிர்ப்பார்த்த வெற்றியை அப்படம் பெறவில்லை.
அதற்கடுத்ததாக அவர் நடிக்க இருந்தப் படம் ‘பாம்பே’. இயக்குநர் மணிரத்னம் இதனை உறுதி செய்ய, மனீஷா கொய்ராலாவுடன் ஃபோட்டோ ஷூட்டும் எடுக்கப் பட்டது. ஆனால் அப்போது விக்ரம் தாடியுடன் இருந்தார், கதைப்படி ஹீரோ ‘கிளீன் ஷேவில்’ இருக்க வேண்டும் எனக் கூறிய மணிரத்னம், அந்தத் தாடியை எடுக்கச் சொன்னார். ஆனால் தான் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ‘கன்டினியூவிட்டி’க்கு தாடி தேவைப்படுவதால், அதனை எடுக்க முடியாது எனக்கூறி அந்தப் படத்திலிருந்து விலகினார் விக்ரம்.

பிறகு அரவிந்த்சாமியை நடிக்க வைத்தார் மணிரத்னம், படமும் மிகப்பெரிய ஹிட். அதனால் என்ன, திறமையானவர்களுக்கு ‘லேட்’ ஆனாலும், அவர்களது கடின உழைப்பு அவர்களை உச்சம் தொட வைக்கும் என்பதற்கு விக்ரம் ஒரு சிறந்த உதாரணம்.
பிறகு வாய்ப்புகளின்றி இருந்த விக்ரம் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறிய வேடங்களிலும், தமிழில் ‘டப்பிங் ஆர்டிஸ்டாகவும்’ வேலை செய்தார். 1990-லிருந்து 1999-வரை விகரம் நடித்த எந்தப் படங்களும் அவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு ஓடவில்லை. இருந்தாலும் நடிப்பின் மீதுள்ள தீராக் காதலால், தன் முயற்சியை இன்னும் வலுப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இயக்குநர் ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுக்கும் போது ‘நம்ம எப்போ இவர் படத்துல நடிப்போம்’ என தன்னுள் கேள்விக் கேட்டுக் கொண்டாராம் விக்ரம்.

இப்படி பல தடைகளைக் கடந்து வந்து 1997-ல் அவர் நடித்தப் படம் தான் சேது. இயக்குநர் பாலாவுக்கு முதல் படம், தோல்விகளை மட்டுமே பார்த்துப் பழகிய விக்ரமுக்கு மிக முக்கியமானப் படம். ஆனால் படத்தை முடிப்பதற்கு முன்பே ஏகப்பட்ட பிரச்னைகள். தயாரிப்பாளர் தரப்பில் பணம் தரவில்லை.
இயக்குநர் பாலா தனது ‘இவன் தான் பாலா’ புத்தகத்தில், ‘படத்தை ஒருவழியாக கஷ்டப்பட்டு முடிச்சும், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் யாரும் படத்தை வெளியிட முன்வரல. காரணம், படத்தோட கிளைமேக்ஸ் மேல யாருக்கும் நம்பிக்கை வரல’. சரின்னு அந்த கேப்புல விக்ரம் சீரியல்ல நடிக்கப் போனாரு. ஒருநாள் திரும்பி வந்து, சீரியல்ல எனக்கு அறுபதாயிரம் ரூபாய் குடுத்தாங்க, வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு, அதனால நான் பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்குறேன். ஐம்பதாயிரத்தை படத்த ரிலீஸ் பண்ண வச்சுக்கோங்கன்னு சொன்னதும் நான் அப்படியே உடைஞ்சு போய்ட்டேன்’ என சேது படம் கடந்து வந்த பிரச்னைகள் பற்றி குறிப்பிட்டு இருப்பார்.

பல பிரச்னைகளைக் கடந்து 1999-ல் சேது ரிலீஸ் ஆனது. இருந்தாலும் பெரிதாக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்படவில்லை. பெரும்பாலான தியேட்டர்களில் ஒரு ‘ஷோ’ தான் திரையிடப்பட்டது. அதன்பிறகு படத்தைப் பார்த்த மக்களுக்குப் பிடித்துப் போக, அதன் பின்னர் இரண்டு வாரம் கழித்து தான் அதிக அளவில் திரையிடப்பட்டது. படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து, தேசிய விருதைப் பெற்றது.
சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் அவார்டு, தமிழ் நாடு மாநில விருது ஆகியவைகளும் விக்ரமை தேடி வந்தன. இந்த வெற்றி ‘நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்’ என கதைத் தேர்வில் விக்ரமை அதிக கவனம் செலுத்த வைத்தன. பிறகு அவர் நடித்த தில், காசி, ஜெமினி, தூள், சாமி என எல்லாப் படங்களும் ஹிட் ஹிட் ஹிட்… இதற்கிடையில் சாமுராய், கிங், காதல் சடு குடு என அவரேஜ் படங்களையும் கொடுத்தார்.

பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்து இவர் நடித்த ‘பிதாமகன்’ படம் இவருக்கும் மிக முக்கியமானப் படம். வசனங்கள் ஏதுமின்றி, நல்ல உடை, அழகான தோற்றம் இப்படி எதுவுமின்றி சித்தன் எனும் காட்டுமிராண்டி தனமான மனிதன், அவனுக்குள் இருக்கும் அன்பு, பரிவு, துக்கம் என எல்லாவற்றையும் தனது முகபாவனைகளில் கொண்டு வந்திருப்பார் விக்ரம். அதன் பலனாக தேசிய விருதையும் பெற்றார்.
காதலன் டப்பிங்கில் விக்ரம் நினைத்தது, ‘அந்நியன்’னில் பலித்தது, ஆம்! இயக்குநர் ஷங்கருடன் முதன்முறையாக இணைந்தார் விக்ரம்.
சேதுவுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மொத்தம் 23 படங்களில் நடித்திருந்தார் விக்ரம். அவரின் 50-வது படம் தான் ‘ஐ’.மாடலிங் செய்யும் அழகான உருவம், அதற்கு அப்படியே எதிர்மறையான கொடூரமான இன்னொரு உருவம் என தன் நடிப்பிலும், தோற்றத்திலும் விக்ரம் ‘சென்டம்’ வாங்கியிருப்பார். மொத்தம் 240 கோடி வசூல் செய்த இப்படம், இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் 9-வது இடத்தில் உள்ளது.

இதோ இந்த 53-வது பிறந்தாளின் போது கூட, கடாரம் கொண்டான், துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணா என அத்தனை எனர்ஜியாக ஓடிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.
வாழ்க்கை எல்லோருக்கும் ஓர் வாய்ப்பை வழங்கி, கூடவே கண்ணாமூச்சியும் விளையாடுகிறது. அதை சரியாகப் பயன்படுத்தி, கடினமாக உழைப்பவர் விக்ரமாகவும், அதைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பவர் வெறும் ஆளாகவுமாகவே இங்கே அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
ஹேப்பி பர்த் டே விக்ரம்!