‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் நடிக்கும் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. தமிழில் முதன்முதலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆரவ், சினேகன், ஓவியா, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி, ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, கஞ்சா கருப்பு, நமிதா, ரைஸா, பரணி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், காஜல், சுஜா வருணி, அனுயா, ஸ்ரீ என 19 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில், ஆரவ் வெற்றி பெற்றார். அத்துடன், இதில் கலந்துகொண்ட எல்லாருக்குமே மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. சிலருக்கு அது நெகட்டிவ் பப்ளிசிட்டியாகவும் அமைந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார் ஓவியா. ‘ஓவியா ஆர்மி’யை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
‘பிக் பாஸ்’ வீட்டில் காதலித்ததாக கூறப்படும் ஆரவ் – ஓவியா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு இரண்டு போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் – ரைஸா தான் அவர்கள் இருவரும்.
‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பால் ஜோடியாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மாடலான ரைஸா, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோலின் பர்சனல் செகரட்டரியாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்தை, இளன் என்பவர் இயக்குகிறார். கிருஷ்ணா, சந்திரன் நடித்த ‘கிரகணம்’ படத்தை இவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.