சிம்பு முதன்முறையாக இசையமைத்துவரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண்.
‘லொள்ளு சபா’ சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. வைபவி ஷாண்டில்யா ஹீரோயினாக நடிக்க, காமெடியனாக விவேக் நடித்துள்ளார். நடிகர் விடிவி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
சிம்பு, இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். முதலில் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அதன்பிறகு, அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையமைப்பதாக இருந்தது. கடைசியில், சிம்பு இசையமைக்கப் போவதாக அறிவித்தார் சந்தானம். “என்னுடைய காட்பாதர் மற்றும் சிறந்த மனிதரான சிம்பு, முதல்முறையாக ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு இசையமைக்கிறார்” எனக் குறிப்பிட்டார் சிம்பு.
இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், லியோன் ஜேம்ஸ் என மூன்று இசையமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாடலை இந்தப் படத்தில் பாடியிருக்கின்றனர். சிம்புவின் தந்தையான டி.ஆரும், தன் மனைவி உஷாவோடு சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாணும் சிம்பு இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல், ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டைட்டில் பாடலாக அமைந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நன்றாகப் பாடுவார் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ‘பிக் பாஸ்’ ஹவுஸுக்கு அஞ்சலி வந்தபோது கூட ஹரிஷ் கல்யாண் பாட்டு பாடி அவரை அசத்தினார்.
ஹரிஷ் கல்யாண் பாடிய சில பாடல்களைக் கேட்ட சிம்பு, சில தினங்களுக்கு முன்பு அவரை அழைத்துள்ளார். வாய்ஸ் டெஸ்ட்டும் ஓகே ஆக, பாடலைப் பாடி முடித்துவிட்டார் ஹரிஷ் கல்யாண். சிம்புவுக்கு இசையில் மிகச்சிறந்த அறிவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.