HBD Yuvan: இசைக் கடலில் நீந்தி, வெற்றி வாகை சூடிய யுவன்!
Happy Birthday Yuvan Shankar Raja: பல இசையமைப்பாளர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள, புது முயற்சிகளை கையாள்கையில், தங்களுடைய ஒரிஜினாலிட்டியை இழந்து விடுவார்கள்.
Yuvan Shankar Raja Birthday: தமிழ் இசை உலகைப் பொறுத்தவரையில் என்றும் இசைஞானி இளையராஜா தான் அதற்கு ராஜா. அவரின் வாரிசுகள் அனைவரும் அப்பாவைப் பின்பற்றி இசைத்துறைக்குள் வந்தாலும், முக்கியமான இடம் இளையராஜாவின் இளைய வாரிசு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு உண்டு.
Advertisment
90-களின் இறுதியில் இசையமைக்க தொடங்கிய யுவன், 2000-களில் அசுர வளர்ச்சியடைந்தார். அப்பாவைப் பின்பற்றி வரும் எவருமே, அந்த புகழ் வெளிச்சத்தில் தாமும் கொஞ்ச காலம் ஜொலிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் யுவன் அப்படியில்லை, தனது அப்பா அவ்வளவு பெரிய இசை ஜாம்பவனாக இருந்தபோதிலும், தான் இசையமைத்தப் படங்களின் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார். இதன் பலனாக, ”பின்னணி இசை என்றால், யுவன் ஷங்கர் ராஜாவை அடிச்சுக்க ஆளில்லை” என்ற வரலாற்றைப் படைத்தார்.
”அரவிந்தன், வேலை, கல்யாண கலாட்டா” என 3 படங்களுக்கு இசையமைத்திருந்தபோதிலும், “யாருப்பா இந்த படத்தோட மியூஸிக் டைரக்டர்” என தேட வைத்தது, இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” திரைப்படம் தான்! அதுவரை வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருந்த யுவன், பின்னர் ஒவ்வொரு படத்திலும் புது விதத்தை வெளிக் கொணர தொடர்ந்து ஓடினார். அந்த சமயத்தில் “தீனா, துள்ளுவதோ இளமை” என யுவனின் இசையில் திரைப்படங்கள் வெளியாகின. ”சொல்லாமே தொட்டுச் செல்லும் மின்னலாகட்டும்”, யுவன் பாடிய “இது காதலா” பாடலாகட்டும், இரண்டும் காதலை மையப்படுத்திய பாடல்கள் தான். ஆனால் அதன் ஃபீல் வெகு வித்தியாசமானது!
”நந்தா, ஏப்ரல் மாதத்தில், மெளனம் பேசியதே” என யுவனின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்றுக் கொண்டிருந்த வேளையில், இயக்குநர் செல்வராகவனின் “காதல் கொண்டேன்” படம் யுவனை அடுத்த தளத்திற்கு கூட்டிச் சென்று, ரசிகர்கள் அவரை கொண்டாட வைத்தது. இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
அதற்கடுத்த வருடம் மீண்டும் செல்வா - யுவன் கூட்டணியில் ”7ஜி ரெயின்போ காலனி” திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மனதில் தெய்வ லெவலுக்கு யுவனை உயர்த்தியது. படத்தின் கதைகளம், அதற்கு யுவனின் பின்னணி இசை, சூழலுக்கேற்ற பாடல்கள் என ரசிகர்களிடம் அந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக யுவன் - செல்வா கூட்டணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தொடர்ந்து, “மன்மதன், ராம், அறிந்தும் அறியாமலும், தாஸ், ஒரு கல்லூரியின் கதை, கண்ட நாள் முதல், கள்வனின் காதலி, சண்டக்கோழி” என பல வெற்றி ஆல்பங்களைக் கொடுத்தார் யுவன். பின்னர் வெளியான, “புதுப்பேட்டை” படத்தை தங்களது மகுடத்தில் மிகப்பெரிய மாணிக்கக் கல்லாய் பதித்தது யுவன் - செல்வா கூட்டணி. இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் வெகுவாக பாராட்டப்பட்டது.
”பட்டியல், வல்லவன், பருத்திவீரன், தாமிர பரணி, தீபாவளி, சென்னை 28, சத்தம் போடாதே, கற்றது தமிழ், பில்லா, சரோஜா, யாரடி நீ மோகினி, சிவா மனசுல சக்தி, சர்வம், பையா, பானா காத்தாடி, நான் மகான் அல்ல, கழுகு, மங்காத்தா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தங்கமீன்கள், ஆரம்பம், அஞ்சான், தர்மதுரை, தரமணி, பேரன்பு, இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ், ப்யார் பிரேமா காதல், மாரி 2 மற்றும் சமீபத்தில் வெளியான நேர்க்கொண்ட பார்வை” என யுவனின் இசையில் பல ஆல்பங்கள் தெறி ஹிட்டடித்திருக்கின்றன.
யுவனிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டியே, வஸந்த், செல்வராகவன், அமீர், ராம், லிங்குசாமி என இயக்குநர்களுக்கு ஏற்றவாறு தனது இசை பாணியை வகுத்திருப்பது தான். அதோடு, ஒரு பாடலின் வரிகள் இசைப்பதற்கு முன்பு கோர்க்கப்பட்டிருக்கும் சில நொடி இசையை வைத்தே, இது யுவனின் பாடல் தான் என, எவராலும் எளிதாக கணிக்க முடியக் கூடிய இலக்கணத்தையும் அவர் தன் பாடல்களில் தூவி விட்டு செல்வதும் தான்!
பல இசையமைப்பாளர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள, புது முயற்சிகளை கையாள்கையில், தங்களுடைய ஒரிஜினாலிட்டியை இழந்து விடுவார்கள். பின்னர் அதை மீட்க போராடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் யுவன் மிக கவனமாகவே இருக்கிறார். புதிய முயற்சிகளை கையாண்டால் கூட, தனித்தன்மையை அவர் இழக்காமல் இருப்பது இங்கு அவசியம் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்!
யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்
ஆரம்பத்தில் ”நகர வாழ்க்கையை மையப்படுத்திய படங்களில் தான் யுவனால் ஸ்கோர் செய்ய முடியும், வில்லேஜ்லாம் அவருக்கு வராது” என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் பருத்தி வீரன் படம் மூலம் அதற்கு சிறந்த பதிலடியைத் தந்தார் யுவன். கிராம பிண்ணனியில் வெளிவந்த அந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும், கிராமத்தின் மண் மணம் மாறாமல் இருந்தன.
ஆம்! ஆரம்ப காலத்தில் யுவன் இசையமைக்கும் படங்களின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இளையராஜாவை அழைப்பார்களாம், அதற்கு “நான் வர மாட்டேன். இசை ஒரு கடல். அதுல நீ நீந்தி வா. உன்கிட்ட விஷயம் இருந்தா, நீ நிச்சயமா மேல வந்திருவ. உன்னை நான் புரமோட் பண்ணிடுற மாதிரி எப்பவுமே நான் இருக்க மாட்டேன். உனக்காக நான் பேசத் தேவையில்லை. உன் இசையை நீ பேச வை" என இளையராஜா கூறியது, மெல்லிய இசையாக யுவனின் அடி மனதில் ஒலித்துக் கொண்டிருந்திருக்கலாம். அப்பா சொன்னபடியே தனது இசையால் உலகம் முழுக்க தன்னைப் பற்றி பேச வைத்து விட்டார் யுவன்!