தமிழ் சினிமா மார்க்கெட்டில் விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இன்றைய தேதியில், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் நாயகன் என்று சொன்னால், அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். அவரின் சமீபத்திய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.
சிவகார்த்திகேயன் நடித்த படம் ரிலீஸாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்த ‘ரெமோ’ படம்தான் அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. தனது சொந்தப் பெயரான சிவா என்ற கேரக்டரில் நடித்திருந்த அவர், கீர்த்தி சுரேஷை கரெக்ட் பண்ணுவதற்காக ரெஜினா மோத்வானி என்ற பெயரில் லேடி கெட்டப் போட்டு நடித்திருந்தார்.
‘ரெமோ’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடி. அதுமட்டுமல்ல, மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த ஆயுத பூஜைக்கு ரிலீஸாகியிருக்க வேண்டிய படம், சிலபல காரணங்களால் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த இந்த 6 வருடங்களில், ஒரு வருடத்துக்கு மேலாகியும் அடுத்த படம் ரிலீஸாகாமல் இருப்பது இதுதான் முதல் முறை. ‘இனிமேல் இதுமாதிரி நடக்காது’ என்கிறார் சிவகார்த்திகேயன்.
“பெரிய கதையாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதுதான் இந்த இடைவெளிக்கு காரணம். ஒவ்வொரு படமும் 100 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் எடுக்கப் படுகிறது. இனிமேல் இந்த மாதிரி இடைவெளி இல்லாமல், வருடத்துக்கு மூன்று படங்களாவது கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிச்சயம் அப்படி நடக்கும் என நம்புகிறேன்” என்கிறார் சிவகார்த்திகேயன்.