‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருந்து ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்திருந்தனர். மெஹ்ரீன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். துளசி, சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை. இதனால் வசூல் குறையவே, படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளார் சுசீந்திரன். குறிப்பாக, கதைக்குத் தேவையில்லாத ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளார். மேலும், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் மாற்றம் செய்துள்ளார். நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்ட படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
“ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை 15 நாட்கள் படமாக்கினோம். சூழ்நிலை காரணமாக படத்தில் இருந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், ‘கேர் ஆஃப் சூர்யா’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாகியுள்ளது. அதிலும் மேற்சொன்னவற்றை நீக்கியுள்ளார் சுசீந்திரன். இப்படி செய்தாலாவது படம் ஓடும் என்று நம்புகிறார் சுசீந்திரன். இதனால், தயாரிப்பாளர் மட்டுமின்றி ஹீரோயின் மெஹ்ரீனுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காரணம், மெஹ்ரீன் அறிமுகமான முதல் தமிழ்ப் படம் இது. தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி மூன்று வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் மெஹ்ரீன். அறிமுகமான முதல் தமிழ்ப் படத்திலேயே தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படுவது என்பது யாராக இருந்தாலும் பெரிய பாதிப்புதான். அதுவும் படம் ரிலீஸானபிறகு நீக்கப்படுவது என்பது கொடுமையிலும் கொடுமை. செண்டிமெண்டில் ஊறிப்போன தமிழ் சினிமா, இனிமேல் மெஹ்ரீனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யத் தயங்கும் என்பதுதான் உண்மை.