சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
அக்ஷய் குமார் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் உரிமையை இயக்குநர் தியாகராஜனின் மனைவியான சாந்தி தியாகராஜன், தன்னுடைய ‘ஸ்டார் மூவிஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வாங்கி வைத்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதால், இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சாந்தி தியாகராஜன். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் ஆர்.பி.பி. ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுத்ததாகவும், ஓராண்டுக்குள் படத்தை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விற்றதாகவும் கூறிய ஸ்டார் மூவிஸ் நிறுவனம், தங்களிடம் முறையாக அனுமதி பெறாமல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை எடுத்துள்ளதோடு, அதைத் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதாக குற்றம் சாட்டியது.
ஆனால், ஆர்.பி.பி. ஃபிலிம் ஃபேக்டரியிடம் இருந்து முறைப்படி வாங்கி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகவும், கடைசி நேரத்தில் வேண்டுமென்றே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, தடைகோரிய மனுவை முடித்து வைத்தார். மேலும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்துப் பிரச்னைகளும் பிரதான வழக்கில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டார் மூவிஸ் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
“படத்தை உரிய அனுமதி பெற்று தயாரித்துள்ளனர். இறுதி நிலையில் படத்துக்குத் தடைவிதிக்க முடியாது. மனுதாரருக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், இறுதி விசாரணையில் முடிவெடுக்கலாம்” என்று கூறிய நீதிபதிகள், படத்துக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.