ஜாஸ் சினிமாஸ் சிஇஓவான விவேக் ஜெயராமன் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அந்த நிறுவனத்தை முடக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் உள்பட சசிகலா மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 9ஆம் தேதி அதிரடியாகப் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர் வருமான வரித்துறையினர். 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், 1800 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சோதனை நடைபெற்ற இடங்களில், கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகமும் ஒன்று. வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள 11 லக்ஸ் தியேட்டர்களுக்கான கணக்கு வழக்குகள் இங்குதான் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, லக்ஸ் தியேட்டர்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த ஜாஸ் சினிமாஸின் சிஇஓவாக விவேக் ஜெயராமன் இருந்து வருகிறார்.
1000 கோடி ரூபாய் கொடுத்து 11 தியேட்டர்களையும் சசிகலா விலைக்கு வாங்கியதாக கடந்த ஆண்டு பரபரப்பு கிளம்பியது. ஆனால், ஜெயலலிதாவோ, சசிகலாவோ இதுகுறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், அவர்கள் வாடகை அடிப்படையில்தான் தியேட்டர்களை நடத்துவதாக ஃபீனிக்ஸ் மால் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சோதனையை முன்னிட்டு சில நாட்களாக லக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன. அத்துடன், ஜாஸ் சினிமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளமும் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தியேட்டர்களை விலைக்கு வாங்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக, விவேக் ஜெயராமனை அழைத்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு வருமான வரித்துறையினர் அளித்த இரண்டு நாள் கெடு முடிந்த நிலையில், மறுபடியும் விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளனர்.
இப்போதும் அவர் ஆஜராகவில்லை என்றால், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.