பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காததால், அடுத்த விடுமுறையான குடியரசு தின விடுமுறையைக் குறிவைக்கின்றன தமிழ்ப் படங்கள்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 9 படங்கள் வரை ரிலீஸாக இருந்தன. ஆனால், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகிய 3 படங்களும் அனைத்து தியேட்டர்களையும் கைப்பற்றி விட்டதால், மற்ற படங்கள் வேறு ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றன.
அதுவும் குறிப்பாக, குடியரசு தினத்துக்கு அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் படத்தை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘டிக் டிக் டிக்’, விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள ‘இரும்புத்திரை’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘நிமிர்’, அனுஷ்கா நடிப்பில் அசோக் இயக்கியுள்ள ‘பாகமதி’ ஆகிய 4 படங்கள் 26ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே கூறப்பட்டது.
இந்நிலையில், பொங்கலுக்கு தியேட்டர் கிடைக்காத சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ படத்தை ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, ரோபோ சங்கர், வையாபுரி, சதீஷ் என பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே ரிலீஸான ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது.
இதுதவிர, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தையும் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக், நிகாரிகா கோனிடேலா, காயத்ரி, விஜி சந்திரசேகர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, ‘எமன்’ உள்பட 8 கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இவை தவிர, பாலிவுட்டில் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘பேட் மேன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்தப் படங்களும் தமிழில் ரிலீஸாகும் என்பதால், 26ஆம் தேதி என்னென்ன படங்கள் ரிலீஸாகும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.