தென் தமிழகத்தில் பிறந்து தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று.
1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி தென் தமிழகத்தின் மீனம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருனை என்ற பக்தி படத்தில் முருகன் வேடத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார், சிவாஜி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1976-ம் ஆண்டு இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி தனது முதல் படத்திலேயே இன்றைய முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல் முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்த ஸ்ரீதேவி ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதே சமயம் ஃபிலிம்பேர் சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரஜினி கமல் இருவருடனும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதேவி, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 1996-ம் ஆண்டு ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிக்காத இவர், பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
கடைசியாக மாம் என்ற படத்தில் நடித்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறவினர் திருமணத்திற்காக தூபாய் சென்றிருந்தபோது அங்கேயே மரணமடைந்தார். அவரது மரணம் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் இல்லை என்றாலும், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அந்த வகையில் ஸ்ரீதேவியின் பிறந்த நாளான இன்று தமிழில் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் குறித்து பார்ப்போம்.
மூன்று முடிச்சு (1976)
இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படம் தான் ஸ்ரீதேவி தமிழில் நாயகியாக நடித்த முதல் படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது.
16 வயதினிலே (1977)
இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படம் 16 வயதினிலே. இந்த படத்தில், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மயிலு என்ற கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் செந்தூரப்பூவே பாடலை இன்று கேட்டாலும் பலருக்கும் ஸ்ரீதேவி ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு தனது நடிப்பில் முத்திரை பதித்திருந்த ஸ்ரீதேவி சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் ஸ்பெஷல் விருது பெற்றிருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார்.
சிகப்பு ரோஜாக்கள் (1978)
பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் சிகப்பு ரோஜாக்கள். கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்திருந்தார். தனது கணவன் ஒரு கொலைகாரன் என்று தெரிந்தும் இறுதிவரை அவனை காதலிக்கும் ஒரு காதலியாக ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்திற்காகவும் .ஃபிலிம்பேர் விருதுக்கு ஸ்ரீதேவி பரிந்துரை செய்யப்பட்டார்.
பகலில் ஓர் இரவு (1979)
தமிழில் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இயக்கியிருந்த இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான படம் பகலில் ஓர் இரவு. விஜயகுமார் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில், சிறப்பாக நடித்த ஸ்ரீதேவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. மலையாளத்தில் வெளியான ஆலிங்கனம் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த பகலில் ஓர் இரவு.
வறுமையின் நிறம் சிவப்பு (1980)
மீண்டும் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படம், வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில், திலிப், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கமல் – ஸ்ரீதேவி இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றிருந்துது.
மீண்டும் கோகிலா (1981)
ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திலும் கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
மூன்றாம் பிறை (1982)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான எவர்கிரீன் க்ளாசிக் திரைப்படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஸ்ரீதேவி ஒரு மாற்றுத்திறனாளியாக சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைகான விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாட்டு இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்துடன், ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை என ஒரு சில படங்களில் நடித்திருந்த ஸ்ரீதேவி அந்த படங்களில் கமர்ஷியலாக நடித்திருப்பார். அதே சமயம், கமல்ஹாசனுடன் அவர் நடித்த படங்கள் அனைத்துமே இன்றும் பேசப்படக்கூடிய படங்களில் பட்டியலில் இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகைககான விருது பெற்றுளார் ஸ்ரீதேவி. தமிழில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்த அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.