பல வருடங்களுக்கு முன்பு சூரியனில் இருந்து பிரிந்து சிறிய கல் ஒன்று பூமியில் விழுகிறது. அந்தக் கல்லுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் அரிய சக்தி இருக்கிறது. அதைத் தெரிந்துகொண்ட சித்தர்கள், அதைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கின்றனர். அத்துடன், அதைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி வைக்கின்றனர்.
அந்தக் குறிப்புகள், நிகழ்காலத்தில் இருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருக்கு கிடைக்கிறது. அவர், தன் மாணவர்களுடன் சேர்ந்து அதைத் தேட ஆரம்பிக்கிறார். இன்னொரு கும்பலும் அந்தக் கல்லைத் தேடி அலைகிறது. இதில், ஒரு குரூப்பில் ஹீரோவும் இருக்கிறார். அந்தக் கல், எந்தக் கும்பலுக்கு கிடைத்தது? என்ற காமெடிக் கதைதான் ‘இந்திரஜித்’.
ஹாலிவுட் படங்களைப் போல எடுக்கிறேன் என்று நினைத்து, காமெடியான ஒரு கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர் கலாபிரபு. ஹீரோவாக நடித்திருக்கும்(?) கெளதம் கார்த்திக்கிற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று தெரியவில்லை. அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தும், கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை.
கே.பி.யின் இசையில் ஒரு பாடல் கூட கேட்க முடியாத ரகம். படத்தில் உள்ள ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இராசாமதியின் ஒளிப்பதிவு மட்டுமே. அடர்ந்த காடுகளின் அழகை கேமராவுக்குள் சிறைபிடித்திருக்கிறார். திரைக்கதையில் பயங்கர சறுக்கல். வீடியோ கேம்ஸ் விளையாடுவதைப் போன்று என்னென்னமோ நடக்கிறது. அதுவும் மாவோயிஸ்ட்களை மங்குனிகள் போல் காட்டியதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.