Advertisment

யாருக்கும் தெரியாத 'யூடியூப்' விமர்சகர் பிரஷாந்தின் மறுபக்கம்!

'இன்று தண்ணீர் ஊற்றி நாளை ரோஜா மலர வேண்டும்' என்று நினைப்பவர்கள் யாரும் தயவுசெய்து, யூடியூப் உள்ளே வரவேண்டாம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
யாருக்கும் தெரியாத 'யூடியூப்' விமர்சகர் பிரஷாந்தின் மறுபக்கம்!

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

Advertisment

எனது சொந்த ஊர் அவினாசி. அம்மா, அப்பா, தங்கச்சி என மொத்தம் நாலு பேர் தான் எனது குடும்பம். சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் என்ஜினியரிங் படித்தேன். ஆனால், படிப்பை முழுமை செய்யவில்லை. 2007-ல் ஒரு சாதாரண சம்பளத்திற்கு BPO-ல் வேலைப் பார்த்தேன். 2015-ல் எனக்கு திருமணம் நடந்தது.

publive-image

படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்காமல், எந்த நம்பிக்கையில் அந்த வயதிலேயே யூடியூபில் சினிமா விமர்சனம் செய்ய வேண்டும் முடிவெடுத்தீர்கள்?

நான் வேலைப் பார்த்த BPO தான் எனக்கு கஸ்டமர் சர்வீஸ் எனும் விஷயத்தை கற்றுக் கொடுத்தது. இதனை தனியாக நாமே செய்யமுடியும் என எனக்குள் நம்பிக்கையை கொடுத்து. எனவே, வேலையைவிட்டுவிட்டு நான் எனது வீட்டிற்கே சென்று, கம்பியூட்டரில் ஃப்ரீலான்சிங் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது, ஒரு கடின முயற்சியின் பலனாக வீட்டில் இருந்தே  செய்ய ஒரு ஜாப் கிடைத்தது. அந்த வேலை தான் என் பாதையையே மாற்றியது. உலகம் எவ்வளவு பெரியது, அதில் எவ்வளவு வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். அந்த நேரத்தில் தான், நான் சர்வீஸ் செய்த யூஎஸ் கிளைன்ட் ஒருவர் என்னிடம் யூடியூப் பற்றி தெரிவித்தார். அதன்பின்னர் தான், 2010 ஜனவரி மாதம் தனியாக ஒரு டியூப் சேனல் ஆரம்பித்து, முதன்முதலாக 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை விமர்சனம் செய்தேன். இப்படித்தான் எனது இந்த யூடியூப் பயணம் தொடங்கியது.

இதுவரை எத்தனை படங்களுக்கு விமர்சனம் செய்துள்ளீர்கள்?

உண்மையில் இதுவொரு நல்ல கேள்வி. எனக்குத் தெரிந்து 300 படங்கள் இருக்கும். ஆனால், சத்தியமாக என்னிடம் நம்பர்ஸ் இல்லை.

மற்ற ஆன்லைன் சினிமா விமர்சகர்களுக்கும், உங்களுக்குள்ளும் உள்ள வேறுபாடு என்ன? அவர்களிடமிருந்து நீங்கள் எந்த இடத்தில் தனித்து நிற்கிறீர்கள்?

நான் ரொம்ப டீப்பா விமர்சனம் செய்வதில்லை. ஒவ்வொரு ஃப்ரேம் ஃப்ரேமாக பார்த்து விமர்சனம் செய்வதில் உடன்பாடு இல்லை. முக்கியமாக கதை சொல்லமாட்டேன். படம் எப்படி இருக்கிறது என்ற ஒரு ஹிண்ட் மட்டுமே கொடுப்பேன். என்னுடைய விமர்சனத்தில் எனது விருப்பு, வெறுப்பும் ஒரு 40 சதவீதம் இருக்கும். ஆனால், அது மட்டும் என்னுடைய விமர்சனம் கிடையாது. தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் எனது விமர்சனத்தில் தெரிவிப்பேன். இதனை விமர்சனமாகவே பார்க்கவில்லை. ஒரு 5 நிமிடம் மெசேஜாக தான் பார்க்கின்றேன். ஒருபோதும் என்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ள நினைத்ததில்லை. படத்திற்கும் ஆடியன்சிற்கும் இடையே உள்ள பாலமாக தான் என்னை நினைக்கிறேன். இந்த இடத்தில் தான் நான் மற்ற விமர்சகர்களிடமிருந்து தனித்து நிற்பதாக உணர்கிறேன்.

சினிமா படங்களை விமர்சனம் செய்பவர்களால், திரைப்படம் எடுக்க தெரியாது என்பது பொதுவான கருத்து. உங்கள் கருத்து என்ன?

ஒருவரை தூரத்தில் பார்த்தே அவன் நல்லவனா கெட்டவனா என்பதை கணிப்பது எவ்வளவு தவறான ஒரு விஷயமா, அதேபோன்று தான் இந்த விஷயமும். இயக்கம் என்பது ஒரு 'thought process', மேக்கிங் என்பது 'technical process'. எல்லோருக்குள்ளும் ஏதோவொரு மூலையில் ஒரு சினிமா ரசிகன் அவர்களை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறான். யாரையும் நாம் எளிதாக கணித்துவிட முடியாது. யாரையும் குறைவாக எடை போட்டுவிட முடியாது. அதற்காக, நான் சினிமா விமர்சனம் செய்வதால் மற்றவர்கள் என்னை கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக நான் இயக்குனர் ஆனேன் என்றால், என்னைவிட  முட்டாள் ஒருவன் இருக்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் படம் எடுத்துதான் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

publive-image

யூடியூபில் நீங்கள் செய்யும் விமர்சனங்களுக்கு உங்களுக்கு கிடைக்கும் எதிர்மறையான கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

பிறர் தரும் விமர்சனம் தான் எனது பலம். ஒருவர் நம்மை பாராட்டுகிறார் என்றால், அதில் 50 சதவிகிதம் தான் உண்மை இருக்கும். ஆனால், ஒருவர் நம்மை விமர்சிக்கிறார் என்றால், நம்மை பிடித்து போய் தான் அப்படி செய்கிறார். அவருடைய நேரத்தை செலவு செய்து, நமது வேலையைப் பார்த்துதான் திட்டுகிறார். ஆரம்பத்தில், நானும் இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். ஆனால், இப்போது எதார்த்தத்தை புரிந்து கொண்டு, அதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். அதிலும், என்னை ஜென்யூனாக திட்டியவர்களிடம், என்னிடம் தவறு இருக்கும் பட்சத்தில் நான் பதில் தெரிவித்திருக்கிறேன்.

ஒருமுறை 'டிமாண்டி காலனி' எனும் படத்தை நான் 'சுமார் படம்' என விமர்சனம் செய்தேன். அதன் பிறகு, நேயர் ஒருவர் எனக்கு ஒரு நீண்ட அட்வைஸ் கூறினார். அதில், "உன்னுடைய மைண்ட் செட்டோடு போய் படம் பார்க்காதே. உன்னுடைய ஆசாபாசங்களை அதில் திணிக்காதே. ஒரு படத்தை படமாக பார். ஏனெனில், உன்னை நம்பி இங்கு பலர் இருக்கிறார்கள். எனவே ஒரு படத்தை அவசரகதியில் ரிவியூ செய்யாதே" என்றார். இன்று வரைக்கும் அந்த அட்வைஸை நான் ஃபாலோ செய்து வருகிறேன்.

அமெரிக்க அதிபரை நிர்ணயிப்பதில் கூட சமூக வலைத்தளங்கள் இன்று முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எவ்வாறாக இருக்கும்?

ஏன் எதிர்காலத்திற்கு சென்றுவிட்டீர்கள்.... தமிழகத்திலேயே போன தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை தெரிந்தோ தெரியாமலோ முடிவு செய்தது சோஷியல் மீடியாக்கள் தான். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இல்லாமல் இன்று 80 சதவிகித தமிழ் மக்களே இல்லை எனலாம். அதேசமயம் சோஷியல் மீடியாக்களினால் ஏற்படும் குற்றங்களும் இனி அதிகரிக்கும். ஒரு பக்கம் பயங்கரமாக நன்மை செய்கிறது. மற்றொரு பக்கம் பயமுறுத்தும் அரக்கனாகவும் இருக்கிறது. மிகவும் உற்சாகமான அதேசமயம் பயமான பயணம் தான் சோஷியல் மீடியா.

யூடியூபில் வருமானம் ஈட்ட நினைக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அட்வைஸ் என்ன?

சூப்பரான கேள்வி. யூடியூபில் எல்லோரும் சம்பாதிக்கலாம். ஆனால், முதலில் உங்களுக்கு என்ன தெரியும்? யாரை திருப்திப்படுத்த நினைக்கிறோம்? என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து, உங்களுடைய வீடியோ தன்மை சிறப்பாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வீடியோ பார்க்க விரும்பினால், எந்தளவிற்கு எதிர்பார்ப்பீர்களோ அந்த அளவு கண்டன்ட் மற்றும் குவாலிட்டி உங்கள் வீடியோவில் இருக்க வேண்டும்.

யூடியூப் என்பது ஊறுகாய் போலத்தான். எந்தளவிற்கு ஊறுகிறதோ அந்தளவிற்கு அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். முக்கியமாக, வாரம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதையும் அவசரகதியில் இல்லாமல், நன்றாக யோசித்து சிறப்பாக செய்ய வேண்டும்.

ஒருவருடம் அல்லது இரண்டு வருடம் என தொடர்ந்து இதில் உழைத்து வந்தால் தான் காசு பார்க்க முடியும். 'இன்று தண்ணீர் ஊற்றி நாளை ரோஜா மலர வேண்டும்' என்று நினைப்பவர்கள் யாரும் தயவுசெய்து, யூடியூப் உள்ளே வரவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

Prashanth Youtube
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment