தவறுதலாக ஒரு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் ஹீரோ, அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
குண்டு வைப்பதில் எக்ஸ்பர்ட்டான டேனியல் பாலாஜி, உத்தரப் பிரதேச சிறையில் இருந்து தப்புகிறார். ஆந்திராவில் ஒரு குண்டை வெடிக்கச் செய்வதோடு, இன்னொரு குண்டை வெடிக்க வைக்காமல் வேண்டுமென்றே போலீஸிடம் மாட்டவிடும் அவர், தான் ஆந்திராவில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைக்கிறார்.
ஆனால், அவரோ தன்னுடைய அடுத்த டார்கெட்டான சென்னைக்கு வருகிறார். வரும் வழியில் அவருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்து உதவுகிறார் சூரி. பின்னர், தவறுதலாக டேனியல் பாலாஜி மீது காரை இடித்துவிடும் உதயநிதி ஸ்டாலின், அவரை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார். பில் கட்ட பணமில்லாமல் அங்கிருந்து உதயநிதி ஸ்டாலின் எஸ்கேப்பாக, டேனியல் பாலாஜியும் அங்கிருந்து தப்பிக்கிறார்.
டேனியல் பாலாஜி சென்னையில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் போலீஸ், அவருக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் சூரியை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு, அவர்கள் டேனியல் பாலாஜியின் ஆட்கள் எனத் தெரிந்துகொண்டு தேடுகிறது. இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் இருவரும் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
நடிகர்களின் குறையைக் கண்டுபிடிக்க முடியாதபடி அருமையான திரைக்கதையைக் கொடுத்த இயக்குநர் கெளரவ் நாராயணனுக்கு புத்தம்புதிய பூக்களால் ஆன பொக்கே. படம் ஆரம்பிப்பதில் தொடங்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மட்டும் சற்று தொய்ந்து மறுபடியும் டாய் கியரில் வேகமெடுக்கிறது. இறுதிவரை அந்த வேகம் தொடர்வதுதான் படத்தின் ப்ளஸ். டேனியல் பாலாஜி சென்னைக்கும் நுழையும்போது, மைல்கல்லில் கருந்தேள் ஏறுவது போன்ற சின்னச் சின்ன இடங்களில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆக்ஷன், செண்டிமெண்ட், டான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் ஜெயித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதுமாதிரியான நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்தால், விரைவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிப்பார். வெறும் டூயட் மட்டுமே பாடிச் செல்லாமல், தன்னுடைய கேரக்டரை அழகாகச் செய்திருக்கிறார் மஞ்சிமா மோகன்.
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் என கலந்து நடித்திருக்கிறார் சூரி. அளவாக இருந்தாலும் அழகாக ரசிக்க வைக்கிறது அவருடைய காமெடி. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பார்த்த அதே வெறியோடு டேனியல் பாலாஜி. அந்தக் கண்கள் மட்டும் போதும் அவருடைய வெறித்தனத்தை வெளிப்படுத்த. உதவி போலீஸ் கமிஷனராக ஆர்.கே.சுரேஷ் விறைப்பும், வஞ்சகமுமாக நடித்திருக்கிறார். பஸ் டிரைவராக ராதிகா சரத்குமாரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் குறையில்லை. குறிப்பாக, டாப் ஆங்கிள் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. டி.இமானின் இசை, படத்தின் விறுவிறுப்புக்கு வேகம் கூட்டியிருக்கிறது. பாடல்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் காதலை, மஞ்சிமாவின் அண்ணனான ஆர்.கே.சுரேஷ் ஏன் எதிர்க்கிறார் போன்ற சின்னச் சின்ன குறைகளை, திரைக்கதையின் வேகம் காணாமல் செய்து விடுகிறது. ரசிகர்களின் மனதை ‘இப்படம் வெல்லும்’.