பிக்பாஸ் கூத்து: ஜூலியை வைகோவுடன் ஒப்பிட்டு பேசினாரா ரோபோ சங்கர்?

இதனால், கடும் விமர்சனத்தை சந்தித்த ரோபோ சங்கர், தற்போது தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் கமல் அதிகம் அரசியல் பேச ஆரம்பித்தார். அதைவிட அதிகமாக ஆளும்கட்சியில் இருந்து அதிக எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் மக்கள் அறிய சந்தித்தார். ஆனால், ஒருவித ஆளுமையுடன் அதனை கமல் எதிர்கொண்டு வருவது தனிக்கதை….!

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, ஓவியா செய்யும் தவறுகளை கரெக்டாக கேட்ச் செய்து, “குறும்படம்” போட்டுக் காண்பித்து அவர்களை அலற விடும் கமல், காயத்ரியின் கொச்சையான வார்த்தைகளுக்கு மட்டும் நேரடியாக தடா போட மறுக்கிறார். ஒருவேளை நாம் கேட்டால் “நீங்க ஷட் அப் பண்ணுங்க”-னு சொல்லிடுவாரோ என்னவோ…!

தினம் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ். அதேசமயம், புரோ கபடி லீக் தொடரில் விளையாடவுள்ள “தமிழ் தலைவாஸ்” அணியினர் பிக்பாஸ் இல்லத்திற்கு வந்த போது, சோஃபாவில் வீரர்கள் ஒவ்வொருவரும் அமர்வதற்கு வசதியாக முன்பே அடுக்கியது போல் தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. அது எப்படி இத்தனை வீரர்கள் தான் வருவார்கள் என்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்? அதேபோல், நிறைய முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களையும் மீறி நேரத்தை சரியாக சொல்லி விடுகிறார்கள். எனவே, இது ஸ்க்ரிப்ட் இல்லாத ஷோவா? அல்லது பாதி ஸ்க்ரிப்ட் கொண்ட ஷோவா என நாம் கன்ஃப்யூஸ் ஆவதை தவிர்க்க முடியவில்லை.

எது எப்படியோ…இப்போதெல்லாம் இரவு 9 மணி ஆகிவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் முகமும், மனமும் வேறு ஒரு உலகத்திற்கு சென்றுவிடுகிறது. இது எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

இப்போது இந்த பிக்பாஸ் மூலம் காமெடி நடிகர் ரோபோ சங்கருக்கு ஒரு புதிய தலைவலி வந்துள்ளது. அதாவது, ட்விட்டரில் ரோபோ சங்கரின் கணக்கில் இருந்து நேற்று ஒரு ட்வீட் வெளியானது. அதில், “இந்த ஜூலி தான் பிக்பாஸின் வைகோ. இவள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாளோ, அவர் தான் இதுவரை தோற்று வெளியேறி இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தனர்.

இதனால், கடும் விமர்சனத்தை சந்தித்த ரோபோ சங்கர், தற்போது தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வைகோவை பற்றி நான் கருத்து தெரிவித்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது. அந்த ட்விட்டர் கணக்கு என்னுடையது அல்ல. அது என் பெயரில் உள்ள போலியான கணக்கு. எனது உண்மையான ட்விட்டர் கணக்கு ‘iamrobosankar’ ஆகும். அந்த போலி கணக்கின் ஐடி ‘imrobosankar’ . அது என்னுடையது அல்ல. யாரோ செய்யும் தவறுக்காக நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில், ரோபோசங்கரின் ஒரிஜினல் ட்விட்டர் கணக்கைவிட போலி ட்விட்டர் கணக்கில் தான் அதிக ஃபாலோயர்கள் இருக்கின்றனர். போலி கணக்கில் 58 ஆயிரம் ஃபாலோயர்களும், ஒரிஜினல் கணக்கில் 34.4 ஆயிரம் ஃபாலோயர்களும் உள்ளனர்.

×Close
×Close