பாலிவுட்டின் இளம் காதல் ஜோடிகளான சோஹா அலிகான் மற்றும் குணால் கேமு ஆகியோருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது.
நடிகை சோஹா அலிகான், பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானின் சகோதரி. இவருக்கும் நடிகர் குணால் கேமுவுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், சோஹா அலிகான் கர்ப்பமான செய்தியை, அவரது கணவர் குணால் கேமு ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். கர்ப்பமான சமயத்திலும் சோஹா அலிகான் யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இது, கர்ப்ப காலங்களில் பெண்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதன் அவசியத்தியத்தை உணர்த்துவதாக அமைந்தது. அவரின் கர்ப்ப கால புகைப்படங்கள் இணையத்தில் செம்ம ஹிட்.
இந்நிலையில், சோஹா அலிகானுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால், சோஹா அலிகான் மற்றும் கணவர் குணால் கேமு இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சந்தோஷமான செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட குணால் கேமு, “இந்த மங்களகரமான நாளில் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்களின் ஆசிர்வாதத்துக்கும், அன்புக்கும் நன்றி”, என பதிவிட்டார். குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தனது காதல் கணவர் தன்னை கர்ப்பகாலத்தில் எவ்வாறு அரவணைத்தார் என்பது குறித்து ஒருமுறை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்துகொண்ட நடிகை சோஹா அலிகான், “நானும் குணாலும் 9 ஆண்டுகளாக காதலிக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். நான் எப்போதும் தனிமையாக உணர்ந்ததில்லை. என்னுடைய குடும்பமும், குணாலின் குடும்பமும் எப்போதும் என்னுடன் இருக்கிறது. குணால் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்”, என கூறியிருந்தார்.