'சோம்பீஸ்' எனும் மனித மிருக வகை படத்தை முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷக்தி சவுந்தர் ராஜன். ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து 'மிருதன்' என்ற பெயரில் இந்த படைப்பை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். இப்படம் சுமாராக சென்றாலும், தமிழில் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தற்போது ஒருபடி மேலே சென்று ஒரு புதிய 'முயற்சியை' இயக்கியுள்ளார் இயக்குனர் ஷக்தி. இதுவரை விண்வெளி தொடர்பாக நாம் எவ்வளவோ ஹாலிவுட் படங்களை பார்த்திருப்போம். அதில் அவர்களது டெக்னாலஜி நம்மை பிரமிக்க வைத்தன. குறிப்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'மார்ஷியன்' படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழு, அங்கு ஏற்படும் ஒரு புழுதிப் புயலில் இருந்து தப்பிக்க முயலும் போது, ஒரு வீரரை மட்டும் தவறவிட்டு கிளம்பிவிடுவார்கள்.
தனி ஆளாக செவ்வாய் கிரகத்தில் சிக்கும் ஹீரோ, மீட்புக் குழு திரும்ப வரும் வரை எப்படி அங்கு வாழ்கிறார் என்பதை மிகவும் தத்ரூபமாக இயக்கியிருப்பார்கள். இந்தப் படமெல்லாம் ஹாலிவுட் டெக்னாலஜியின் ஆகச் சிறந்த சான்றாகும்.
இதுபோன்ற படங்களை பார்க்கும் போது, தமிழில் இப்படி படங்கள் எடுத்தால் எப்படி இருக்கும் என ஒரு சாமானிய ரசிகராக நமக்கு தோன்றியிருக்கும். அதிலும், டான்ஸ், ஃபைட், காமெடி என்ற அந்த மசாலாவையே அரைத்து வந்த நமது ஆதர்ச ஹீரோக்கள், இப்படங்களில் நடித்தால் எப்படி இருக்கும் என்றும் நினைத்திருப்போம்.
இந்த குறையை போக்கும் வகையில் தான் இயக்குனர் ஷக்தி சவுந்தர் ராஜன் 'டிக் டிக் டிக்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. என்னதான் ஒரு இயக்குனர் தனது கற்பனையை அருமையாக கதையாக்கியிருந்தாலும், இதுபோன்ற சோதனை சப்ஜெக்டுகளை ஒப்புக் கொள்ள ஒரு ஹீரோவிற்கு முதலில் தைரியம் வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், அந்தப் படங்களில் நடிக்கவும் ஒரு தில் வேண்டும்.
இதனை 'மிருதன்' படத்திலேயே நிரூபித்திருந்த ஜெயம் ரவி, மீண்டும் இயக்குனர் ஷக்திக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதனை ஷக்தி சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பார் என நம்புவோம்.
இந்நிலையில், டிக் டிக் டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகர் ஆரோன் ஆசிஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க ஹித்தேஷ் ஜபக் இப்படத்தை தயாரித்துள்ளார்.