இதுவரை பாலா படங்களிலேயே இல்லாத அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் ஒன்று ‘நாச்சியார்’ படத்தில் உள்ளது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.
ஏற்கெனவே ரிலீஸான டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரெய்லரில் அதுமாதிரியான வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், வன்முறைக் காட்சிகள் நிறைய இருப்பதால், இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.
பாலா படங்கள் என்றாலே படத்தின் நீளம் மிக அதிகமாக இருக்கும். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக அவர் படமே எடுக்க மாட்டார். ஆனால், ஆச்சரிய விஷயமாக ‘நாச்சியார்’ படம் ஏறக்குறைய 100 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தான் ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம். பிப்ரவரி 16ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து த்ருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ படத்தை இயக்குகிறார் பாலா. தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்திற்கு ‘ஜோக்கர்’ ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.