பாபு
காலா படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால், வசூல்தான் மந்தம் என பலரும் கூறி வருகின்றனர். காலா படத்துக்கான டிக்கெட்கள் எளிதாக கிடைப்பதை வைத்து இப்படியொரு பேச்சு கிளப்பப்பட்டுள்ளது. உண்மையில் காலா படத்தின் வசூல் எப்படி? கபாலி மற்றும் பிற பெரிய படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவா இல்லை நிறைவா?
தமிழக அளவிலான காலாவின் வசூல் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவராதநிலையில், சென்னை பாக்ஸ் ஆபிஸை வைத்து இதனை ஒப்பு நோக்கலாம்.
சென்னை பாக்ஸ் ஆபிஸில் 17 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் பாகுபலி 2 உள்ளது. இது ரஜினியின் எந்திரன் படத்தின் வசூலைவிட அதிகம். அதேநேரம் பாகுபலி 2 படத்தின் சென்னை ஓபனிங் வசூல் குறைவு. பாகுபலி 2 வெளியான முதல் மூன்று தினங்களில் 828 காட்சிகளில் 3.24 கோடிகளை வசூலித்தது.
அஜித்தின் விவேகம் திரைப்படம் காலாவைப் போல் வியாழக்கிழமை வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறில் மொத்தம் 870 திரையிடல்களில் விவேகம் 3.98 கோடிகளை வசூலித்தது. வியாழனையும் சேர்த்தால் வசூல், 5.22 கோடிகள்.
சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் மெர்சலே அதிகம் வசூலித்தது. விஜய்யின் இந்தப் படம் புதன்கிழமை வெளியானது. முதல்வார இறுதியில், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறில் 678 திரையிடல்களில் மெர்சல் 3.90 கோடிகளை வசூலித்தது. புதன், வியாழனையும் சேர்த்தால், 6.86 கோடிகள்.
ரஜினியின் கபாலி திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 942 திரையிடல்களில் 3.49 கோடிகளை வசூலித்தது.
சரி, காலாவின் வசூல்...?
சென்னையில் காலா வெள்ளி, சனி, ஞாயிறில் 765 திரையிடல்களில் 4.26 கோடிகளை வசூலித்துள்ளது. வியாழனையும் சேர்த்தால் 6.69 கோடிகள். பாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி என அனைத்துப் படங்களின் ஓபனிங் வசூலைவிட காலாவின் சென்னை ஓபனிங் வசூல் அதிகம். மெர்சலின் ஐந்து நாள் வசூலைவிட (6.86 கோடிகள்) காலாவின் நான்கு நாள் வசூல் (6.69 கோடிகள்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
காலாவின் ஓபனிங் குறைவு என்ற விமர்சனத்தை இந்த புள்ளிவிவரங்கள் இல்லை என்று நிரூபிக்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளில் காலாவின் வசூல் நிலவரம் தெரிய வரும்போது உண்மைநிலை மேலும் தெளிவாக புலப்படும்.