“காலா” யாருக்கான படம்? மனம் திறக்கிறார் பா. இரஞ்சித்!

உலகெங்கும் திரையரங்குகளை அதிர வைக்கக் களம் இறங்குகிறது “காலா”. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள ‘காலா’ அவதாரத்தை மக்கள் வரும் ஜூன் 7ம் தேதி முதல் திரையரங்குகளில் காணலாம்.

“போராடுவோம்.., போராடுவோம்” என்று தொடங்கியது முதன் முதலில் வெளியிடப்பட்ட “காலா” படத்தின் டிரெய்லர். காலா என்றால் கருப்பு கரிகாலன், சண்டையிட்டுக் காப்பவன் என்றெல்லாம் ரஜினியின் கதாப்பாத்திரத்தை விவரிக்க, மக்களிடம் சுவாரசியம் பெருகியது.

இன்னும் 5 நாட்களில் காலா திருவிழா தொடங்கும் நிலையில், “காலா” மக்களுக்கானப் படம் என்று தகவலை பகிர்ந்து மனம் திறக்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித்.

காலா என்றால் கருப்பு என்று அர்த்தம் ஆனால் இந்தக் கருப்பு நிச்சயம் வண்ணமயமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ரஞ்சித். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வாழும் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த படமாக அமைந்துள்ளது. பிரபல நடிகர்கள் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் கதாப்பாத்திரங்களோடு இணைந்து வாழ்வது போலவே பட உருவாக்கம் இருக்கும் என்றும் ரஞ்சித் கூறுகிறார். அதே நேரம் இந்தத் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

கபாலி படத்தில் மலேசியா வாழ் தமிழர்கள் பற்றிய வாழ்க்கை கதையை கூறியுள்ள ரஞ்சித் இந்தப் படத்தில் நில அரசியல் பேசியுள்ளார். தனது சொந்த மன்னை விட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்ற மக்கள் மும்பையில் வாழும் உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கிறது “காலா” திரைப்படம்.

திரைப்படத்தில் வரும் காலா யார்?

காலாவாக வரும் ரஜினிக்கு, இரண்டு காதல். இளம் வயதில் ஷெரீனா (ஹீனா குரேஷி) என்ற பெண்ணை காதலித்த இவர், பின் நாட்களில் செல்வியை (ஈஸ்வரி ராவ்) திருமணம் செய்துகொள்கிறார். பழைய காதலி மேல் உள்ள காதல் சிறிதும் குறையாவிட்டாலும், தனது மனைவி மீதும் அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளது. அனைத்துக் குடும்பங்களில் இருப்பது போலவே இந்தத் தம்பதியின் ரொமேன்ஸ் வேர லெவலில் அமைந்துள்ளது.

இவ்வாறு காலா மற்றும் அவர் குடும்பம் வசிக்கும் தாராவி பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்தப் படம்.

இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான மக்கள் நெல்லைத் தமிழ் பேசுபவர்கள். மும்பையில் வாழும் பெரும்பாலான தமிழர்களில், நெல்லையில் இருந்து குடிபெயர்ந்தவர்களே அதிகம் என்பதால், காலா படத்தில் நெல்லைத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கபாலி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் வேலை வாங்குவதற்குச் சிறிது தயங்கிய ரஞ்சித், இந்தப் படத்தில் தனக்கு நிச்சயமாக இது தான் வேண்டும் என்று திட்டவட்டமாக கேட்டுள்ளார். அதற்கான உரிமையையும் ரஜினிகாந்த் வழங்கியுள்ளார். இந்த மாபெரும் படைப்பில், ரஞ்சித் வடிவமைத்த காலா கதாப்பாத்திரத்திற்கு மிகவும் எடுப்பாகப் பொருந்தியுள்ளார் ரஜினிகாந்த் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித். மேலும் இந்தப் படம் நிச்சயம் மக்களுக்கான படம் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஞ்சித் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரும் இப்படத்தில் நடித்திருப்பது பெரிய அட்வாண்டேஜ் என்று தான் கூற வேண்டும். ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் 7ம் தேதி வெளியாகும் “காலா” படத்திற்கு ரிசர்வேஷன்கள் விரைவில் டிக்கெட் ரிசர்வேஷன்ஸ் தொடங்க உள்ளது.

×Close
×Close