‘ரஜினியின் ‘காலா’ படத்துக்குத் தடைவிதிக்க முடியாது’ என வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘காலா’. ‘கபாலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் என 4 ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கபாலி’யைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
‘காலா’ படத்தின் மூலக்கதையும், தலைப்பும் தன்னுடையது எனவும், ‘காலா’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற விசாரணையில், ‘காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கை விசாரிக்க முடியும்’ என தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியதுடன், தடைகோரிய வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.