மீண்டும் பப்ளி ஜோதிகாவை பார்த்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி : காற்றின் மொழி இயக்குநர் பிரத்தியேக பேட்டி

சுபகீர்த்தனா

ஹிந்தியில் வெளியான துமாரி சுளு படத்தை ரிமேக் செய்து இயக்கிய இயக்குநர் ராதா மோகன் படமான காற்றின் மொழி கடந்த வாரம் வெளியானது. இப்படம் தமிழ்நாட்டில், குறிப்பாக ஜோதிகாவின் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காற்றின் மொழி பிரத்தியேக பேட்டி

இது குறித்து இயக்குநர் ராதா மோகன் சந்தித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் நடத்திய பிரத்தியேக பேட்டி இதோ

– உங்கள் 14 வருட சினிமா வாழ்க்கையில் நீங்கள் 11 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளீர்கள்.

அதனால் என்ன? அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கான கதைகள் வரும் வரை நான் காத்திருப்பேன். அதனால் குறைந்த படங்கள் இயக்குவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

– காற்றின் மொழி படத்தை இயக்குவதற்கு என்ன காரணம்?

ஜோதிகாவும் நானும் எப்பவும் நல்ல நண்பர்கள். அப்போது ஒரு நாள் 60 வயது மாநிறம் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது எனக்கு அவர் போன் செய்து துமாரி சுளு படத்தை பார்க்க வேண்டும் எனக் கூறினார். நானும் படத்தை பார்த்தேன். அதில் வித்யா பாலன் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. துமாரி சுளுவில் வரும் சுளு கதாபாத்திரம் நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் கதாபாத்திரம். ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்பது போன்ற கேரட்கர் அது. இந்த கேரக்டரை மீண்டும் ஒரு முறை உருவாக்கினால் அதற்கு ஜோதிகா நிச்சயம் ஒற்றுப்போவார் என்று உணர முடிந்தது. அதனாலேயே இப்படத்தை தமிழில் இயக்க முடிவு செய்தேன்.

– ஏன் மொழி பாகம் 2 எடுக்கவில்லை, எதற்காக காற்றின் மொழி?

ஜோ கம்பேக்கிற்கு பிறகு, நிச்சயம் ஜோவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதில் அர்வமாக இருந்தேன். அதற்காக மொழி 2 தான் பண்ண வேண்டுமென்று இல்லை. அதற்கான கதை வேண்டும். 60 வயது மாநிறம் எப்படி ஒரு சர்பிரைஸ் படமோ அதே போல் தான் காற்றின் மொழி.

– சரி. 60 வயது மாநிறம் சர்பிரைஸ் படம் தான்… காற்றின் மொழி அதே போல் தான். ஆனால் இரண்டுமே ரீமேக் தானே?

60 வயது மாநிறம் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. ஆனால் துமாரி சுளுவின் ஒவ்வொரு சீனும் இங்கு ரீமேக் செய்யவில்லை. அந்த கதையின் கருவைக் கொண்டு திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்றங்கள் செய்துள்ளேன். சில புதிய கேரட்கர்கள் மற்றும் சீன்களை இந்த படத்தில் வைத்துள்ளேன். அதெல்லாம் துமாரி சுளுவில் இல்லை. துமாரி சுளு படத்தில் கணவன் – மனைவி இடையே நடக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கும் ஆனால் அந்த சீன்ஸ் எல்லாம் என்னால் ஜோதிகாவை வைத்து இயக்க முடியாது. அது போன்ற காட்சிகளை மக்களும் விரும்ப மாட்டார்கள்.

ஒரு ரீமேக் கதை இயக்குவது சாதாரண விஷயமில்லை. அந்த கதையின் கருவை சிறுது அளவும் சுவாரசியம் குறையாமல் கொடுக்க வேண்டும். காற்றின் மொழி அப்படிப்பட்ட சவாலான படம் தான்.

– துமாரி சுளு படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும்… காற்றின் மொழி படத்திலும் அதே போல் நகைச்சுவை காட்சிகள் இருக்கு

என் படத்தின் திரைக்கதைகளில் காமெடியை நான் ஒருபோதும் திணித்ததில்லை ஆனால் காமெடிக்கு நான் மிகப் பெரிய ஃபேன். சிறு வயதில் இருந்தே சார்லி சாப்ளின் காமெடிகளை பார்த்து வளர்ந்தவன். எனக்குள் கொஞ்சம் நகைச்சுவை தன்மையும் இருக்கு… இருக்கு-னு நம்புகிறேன்.

–  ஒரு இயக்குநராக, துமாரி சுளு படத்தை உங்கள் காற்றின் மொழியுடன் ஒப்பிடுவார்கள் என்று உங்களுக்கு தெரிந்ததா?

ஒப்பிடுபவர்களை தடுக்க முடியாது ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிலர் மட்டுமே துமாரி சுளு படத்தை பார்த்திருக்க கூடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மொழி பட அர்ச்சனாவையும் காற்றின் மொழி விஜயலட்சுமியையும் (ஜோதிகா கேரக்டர்கள்) தான் ஒப்பிடுவார்கள் என்று நினைத்து பயந்தேன்.  நல்லவேலை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் மீண்டும் அந்த பப்ளி ஜோதிகாவை பார்த்ததில் ரசிகர்கள்களுக்கு மகிழ்ச்சிதான்.

– உங்களுடைய பெரும்பாலான படங்களில் துணிச்சலான பெண் கதாப்பாத்திரங்களே உள்ளது. மொழியில் அர்ச்சனா, அபியும் நானும் படத்தில் அபி, பிருந்தாவனம் படத்தில் தன்யா… 

நான் பார்த்து வளர்ந்த பெண்கள் எல்லாருமே துணிச்சலானவர்கள். அதனால் என் படங்களில் நான் யாரை இதுவரை பார்த்திருக்கிறேனோ அவர்களின் சாயலே அதிகம் இருக்கும்.

– காற்றின் மொழி படத்தின் துணை கதாப்பாத்திரங்கள் பற்றி ஒரு கேள்வி… உங்களின் பெரும்பாலான படங்களில் எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா மற்றும் குமாரவேல் அதிகமாக நடித்துள்ளனர்…

ஏனென்றால் அவர்களை வைத்து இயக்குவது எனக்கு சவுகரியமாக இருக்கு. எனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவு குடும்பத்தினர் போல் இருக்கும். அது தான் காரணம்.

– உங்கள் படங்களை ஒரு குறிப்பிட்ட கேடகரியில் பொருத்துவதே கடினமாக இருக்கு… குறிப்பாக பயணம் மற்றும் 60 வயது மாநிறம் எதிர்பார்த்த அளவிற்கு சக்சஸ் கொடுக்கவில்லையே…

ஆமாம் ஆனால் அது பற்றி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. நான் எல்லா கேடகரியிலும் படம் எடுத்திருக்கிறேன். இன்னும் திகில் படம் தான் எடுக்கவில்லை. ஒரு இயக்குநர் எல்லா கேடகரியிலும் படம் எடுப்பது நல்ல விஷயம். அந்த விதத்தில் நான் இதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.

– ஜோதிகா பற்றி ஒரு கேள்வி. இவ்வளவு வருடங்களில் அவர் மாறிவிட்டாரா அல்லது பழைய ஜோவாகவே இருக்கிறாரா?

ஒரு மாற்றமும் இல்லை. முன்பு இருந்த அதே ஜோவாக தான் இப்போது இருக்கிறார். ஒரு சிறந்த நடிகையாக அவர் வலம் வருவதை பார்க்க சந்தோஷமாக இருக்கு. மொத்தத்தில் ஜோதிகா ஒரு நல்ல மனிதர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close