ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின் முதன்முதலாக கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சந்திக்க இருக்கின்றனர்.
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என ஆவலோடு எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில், ட்விட்டரில் கருத்து கூறிக்கொண்டிருந்த கமல்ஹாசன் திடீரென அரசியலில் இறங்கினார். வடசென்னையின் பாதிக்கப்பட்ட சில பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன், தன்னைத் தொடர்புகொள்வதற்காக செயலி ஒன்றையும் தொடங்கினார்.
இந்நிலையில், ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லியிருந்த ரஜினிகாந்த், கடந்த 31ஆம் தேதி, ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தெரிவித்தார். ‘வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று ரஜினி அறிவித்துள்ளார். மேலும், மக்களை ஒருங்கிணைப்பதற்காக ரஜினியும் செயலி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நாளை மறுநாள் (ஜனவரி 6) நடைபெற இருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்துப் போட்டிகளுடன் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில், ரஜினி, கமல், விஜய் ஆகிய முன்னணி நடிகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இன்று இரவு மலேசியா புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த். ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், அங்கிருந்து மலேசியா செல்கிறார்.
சினிமாவில் மட்டும் போட்டியாளர்களாக கூறப்பட்டு வந்த ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின் அரசியல் களத்திலும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். எனவே, ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின் அவர்கள் முதன்முறையாக சந்திக்க இருப்பதால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.