‘அப்பா கமல்ஹாசனுக்கு என் மீது பாசம் அதிகம்’ என நடிகை சுஜா வருணி தெரிவித்துள்ளார்.
‘கிடாரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள சுஜா வருணி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தான் பெண்ணாகப் பிறந்ததால் தன்னுடைய தந்தை சின்ன வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்த சுஜா, அடிக்கடி தந்தை நியாபகத்தால் அழுதார். ‘இதைப் பார்த்துவிட்டு ஒரே ஒருமுறை என் அப்பா வீட்டுக்கு வந்தால் போதும். அவருக்கு நான் ஒருவேளை சாப்பாடு போடவேண்டும்’ என்று நிகழ்ச்சியில் கூறினார்.
அதைப் பார்த்த நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசன், “மூன்று மாதம் பாருங்கள் சுஜா. இல்லையென்றால் நான் வருகிறேன், சாப்பிட” என்றார். அதைக்கேட்டு சுஜா உள்பட நிகழ்ச்சியைப் பார்த்தவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
‘பிக் பாஸ்’ முடிந்து 50 நாட்களாகிறது. நிகழ்ச்சியைப் பார்த்து சுஜாவின் அப்பா வந்தாரா? இல்லை, கமல்ஹாசன் எப்போது சாப்பிட வரப்போகிறார்? என சுஜாவிடமே கேட்டோம். ‘ஐஇ தமிழ்’க்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி இதோ...
“நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு என் அப்பா வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், இன்னும் வரவில்லை. கமல் அப்பா வருகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ‘இப்போது வரவேண்டாம். அப்பாவாக இருந்து, என் திருமணத்தை நடத்தி வையுங்கள்’ என்று கமல் அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் நடத்தி வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
அதற்காக, ‘திருமணம் எப்போது?’ என்று கேட்காதீர்கள். நேரம் வரும்போது அதுகுறித்து தெரிவிப்பேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எனக்குப் பிடித்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஓகே சொல்லியிருக்கிறேன். விரைவில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார் சுஜா.
அத்துடன், “கமல் அப்பாவுக்கு என் மீது பாசம் அதிகம். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே, என்னிடம் மட்டும் கொஞ்சம் கூடுதல் கனிவோடு பேசுவார். அவர் ‘சுஜா...’ என அழைப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் ‘உங்களை கட்டிப்பிடிச்சிக்கட்டுமா?’, ‘கிஸ் பண்ணட்டுமா?’ என்று அனுமதி கேட்டு செய்தபோது, நான் கேட்காமலேயே என்னைக் கட்டியணைத்தார் கமல் அப்பா” என்று நெகிழ்கிறார் சுஜா வருணி.