தனக்கு தவறென்று பட்டதைத் தயங்காமல் பேசும் கலைஞன், 63 வயதிலும் கற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் கமல்ஹாசன். நவம்பர் 7ஆம் தேதி அவருக்குப் பிறந்த நாள். ‘தமிழ்நாட்டின் நாளைய முதல்வர்’ என்றெல்லாம் கூட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கமலைப் பற்றி, 63 சுவாரசியமான விஷயங்களை அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து திரட்டினோம்.
* எவ்வளவு நேரம் ஆனாலும், நின்றுகொண்டே பேசுவதுதான் கமல் ஸ்டைல். எட்டு மணி நேரம் ஆனால் கூட, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவ்வளவு உற்சாகத்துடன் நின்றபடியே பேசிக் கொண்டிருப்பார்.
* அமெரிக்காவில் 3 நாட்கள் நடைபெற்ற கார்பெண்டரி ஒர்க்ஷாப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் கமல். அவருடைய அலுவலகத்தில் ஓவியம் ஒன்றை மாட்ட கார்பெண்டர் வந்தபோது, நுணுக்கமான சில விஷயங்களை அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் கமல். அவர் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே அப்போதுதான் விஷயம் தெரியுமாம்.
* எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் கூலாக சமாளிப்பது கமல் ஸ்டைல்.
* வாட்ச் கட்டுவது என்றால் கமலுக்கு ரொம்பவே பிடிக்கும். வீட்டில் பெரிய வாட்ச் கலெக்ஷனே வைத்திருக்கிறார். அணியும் ஆடைக்கு ஏற்றதுபோல் தேர்ந்தெடுத்து வாட்ச் கட்டுவது கமலின் வழக்கம்.
* கமலின் ஆல்டைம் ஃபேவரிட், நீச்சல். மயிலாப்பூர் லஸ் சர்ச் வீடு தொடங்கி, கிழக்கு கடற்கரைச் சாலை வீடுகளிலும் நீச்சல் குளம் உள்ளது. வெளியிடங்களுக்குச் சென்றாலும், தங்கும் இடங்களில் நீச்சல் குளம் இருப்பது போல பார்த்துக் கொள்வார்.
* கமல் சீரியல் பார்ப்பார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அவர் பார்ப்பது தமிழ் சீரியல்கள் கிடையாது. ஹிட்டான வெளிநாட்டு சீரியல்களை விரும்பிப் பார்ப்பார்.
* கமல், அசைவப் பிரியர். நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன என எதையும் விட்டுவைக்க மாட்டார். இடையில் கொஞ்ச காலம் சைவமாக இருந்தவர், மறுபடியும் அசைவத்துக்கு மாறிவிட்டார்.
* அடுத்தடுத்து இயக்குவதற்காக ஏழெட்டு கதைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளார் கமல்ஹாசன். அனைத்துமே பவுண்ட் ஸ்கிரிப்ட்டாக இருக்கின்றன.
* சின்ன வயதில் இருந்தே நாய் வளர்ப்பது கமலுக்குப் பிடித்தமான விஷயம்.
* எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை. காலில் ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்தபோது கூட, சில மாதங்களிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.
* மிளகுப்பொடி தூவிய முட்டையின் வெள்ளைக் கருவும், பிளாக் டீயும்தான் கமலுக்குப் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
* வேறு மொழிகளில் நடிக்கும்போது, அந்த மொழிகளில் உள்ள வார்த்தைகளை சரியாக உச்சரிப்பது பெரும்பாலானோருக்கு கஷ்டம். ஆனால், அந்த வார்த்தைகளின் அர்த்தங்களையும் தெரிந்துகொண்டு சரியாக உச்சரிப்பார் கமல்.
* உலகத் திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். முன்பெல்லாம் தியேட்டர், உலகத் திரைப்பட விழாக்களுக்குச் சென்று படங்கள் பார்ப்பார். இப்போது அலுவலகத்திலேயே ஹோம் தியேட்டரில் பார்த்து விடுகிறார். எல்லா மொழிப் படங்களின் டிவிடிக்களும் அங்கு இருக்கின்றன. சமீபத்தில் ‘மெர்சல்’ படத்தைக் கூட இந்த ஹோம் தியேட்டரில்தான் பார்த்தார்.
* புதிதாக ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டால், அதன் வேர்ச்சொல் எங்கிருந்து வந்தது என்று ஒரு ஆராய்ச்சியே நடத்திவிடுவார். அத்துடன், அந்த வார்த்தையைச் சொன்ன நபரிடமும் அதைப்பற்றி விளக்கம் தருவார்.
* கமலுக்கு மிகவும் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் பாலகுமாரன்.
* சாப்பாட்டைப் பொறுத்தவரை ‘இதுதான் வேண்டும்’, ‘அதுதான் வேண்டும்’ என்ற கண்டிஷன் கிடையாது. எந்த உணவாக இருந்தாலும் ரசித்து, ருசித்து அளவாகச் சாப்பிடுவார்.
* சினிமாவில் இருந்தாலும், மற்ற துறைகளில் உள்ள லேட்டஸ்ட் விஷயங்களையும் உடனே அப்டேட் செய்து கொள்வார்.
* Corduroy பேண்ட் தான் பெரும்பாலும் விரும்பி அணிவார். நீண்ட காலமாக இந்த வகை பேண்ட் தான் அவருடைய ஃபேவரிட்டாக இருக்கிறது.
* மோடியைப் போல கமலுக்கும் ஊர் சுற்றுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். இவர் போகாத உலக நாடுகளே இல்லை. ஷூட்டிங் இல்லையென்றால், ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு கிளம்பி விடுவார்.
* சென்னையில் அடிக்கடி விசிட் செய்கிற இடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டல்.
* இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட பேர் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் உள்பட எந்த விளையாட்டிலுமே கமலுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால், சமீப காலமாக கபடி பிடித்திருக்கிறது.
* நாமெல்லாம் கமல்ஹாசனை ‘என்சைக்ளோபீடியா’ என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், அவரோ எழுத்தாளர் அனந்துவை ‘என்சைக்ளோபீடியா’ என்று அழைப்பார். சினிமா, டெக்னாலஜி என எந்த விஷயமாக இருந்தாலும் அவருடன் விவாதித்திருக்கிறார்.
* கவிதைகள் எழுதப் பிடிக்கும். இதுவரை அவர் எழுதிய கவிதைகள், மிகப்பெரிய தொகுப்பாக இருக்கின்றன. கமலின் கவிதைத் தொகுப்புக்காக காத்திருப்பவர்கள் ஏராளம்.
* ‘ஹேராம்’ படத்தில் பயன்படுத்துவதற்காக வித்தியாசமான பைக்கைத் தேடியபோது கிடைத்ததுதான் ‘மேட்ச்லெஸ்’ பைக். இப்போதும் அந்த பைக் பத்திரமாக கமலிடம் இருக்கிறது. அவர் பிறந்த 1954ஆம் ஆண்டின் மாடல் பைக் அது என்பது கூடுதல் சந்தோஷம்.
* கமலின் மீசை, ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால், அவருக்கோ மீசை வைத்துக்கொள்ளப் பிடிக்காது. கதைக்குத் தேவை என்றால் மட்டுமே மீசை வைத்து நடிப்பார்.
* கமலுக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர், மார்லன் பிராண்டோ. ஹிந்தியில் திலீப் குமார். தமிழில் சிவாஜியும் நாகேஷும்.
* இண்டெல் நிறுவனம், இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்ட்டை அறிமுகப்படுத்த கமலுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்தியாவிலேயே கமலுடன் மட்டும்தான் அந்த நிறுவனம் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கமலுக்கு மெட்ராஸ் பாஷை சரளமாகப் பேச வரும். இந்த விஷயத்தில், நடிகர் லூஸ் மோகன் தான் கமலுக்கு குரு.
* ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என தமிழின் முன்னணி இயக்குநர்கள் அத்தனை பேருடனும் பணியாற்றியவர். ஆனால், இயக்குநர் மகேந்திரனுடன் மட்டும் இணைந்ததில்லை. அந்த வருத்தம் இப்போதும் கமலுக்கு இருக்கிறது.
* கமலிடம் பேசும்போது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேச வேண்டும். எதிரில் இருப்பவரின் கண்கள் வேறெங்காவது சென்றால், பேச்சு நின்றுவிடும்.
* 4 வருடங்களுக்கு முன்பு, பிறந்த நாளின்போது அமெரிக்காவில் இருந்து ஒரு மிருதங்கத்தை வாங்கிவந்து பரிசளித்திருக்கிறார் நடிகை ஜெயப்பிரதா. அங்கேயே அந்த மிருதங்கத்தை இசைத்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் கமல். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின்போது கற்றுக் கொண்டதை, இப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்.
* தமிழ் பேசும் நாயகிகளை அதிகம் பிடிக்கும். ஆனால், தமிழ் பேசும் நாயகிகள் குறைவாக இருக்கிறார்கள் என்பது அவருடைய வருத்தம். அதனால் தான் அபிராமி, சினேகா, த்ரிஷா, ஆன்ட்ரியா என தமிழ் பேசும் நாயகிகளுக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்.
* இந்திய சினிமாவில் டெக்னிக்கலாக முதன்முதலில் சில சாதனைகளை நிகழ்த்தியவர் கமல்ஹாசன். அனிமேஷன் டெக்னாலஜி (‘ராஜ பார்வை’), மார்ஃபிங் டெக்னாலஜி (‘மைக்கேல் மதன காமராஜன்’), கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (‘மங்கம்மா சபதம்’) போன்றவற்றை முதலில் அறிமுகப்படுத்தியது அவர்தான்.
* ‘மர்மயோகி’ படத்தில் அகோரி கேரக்டரில் நடிப்பதற்காக நீண்ட தாடி வளர்த்தார். படம் ட்ராப் ஆனதால், தாடியை மழித்துவிட்டார்.
* ‘உலகின் சிறந்த 100 படங்கள்’ என ‘டைம்ஸ்’ பத்திரிகை வரிசைப்படுத்திய படங்களில், கமலின் ‘நாயகன்’ படமும் ஒன்று.
* ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில், ‘தாயம்’ என்ற தொடர்கதையை எழுதினார். அதுதான் பின்னாளில் ‘ஆளவந்தான்’ படமாக மாறியது.
* காஷ்மீர் பிரச்னை, போதை மருந்துப் பழக்கம் என பல சமுதாயப் பிரச்னைகள் பற்றி கமல் எழுதியவை, ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. வெளியான சில மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்ட இந்தப் புத்தகத்தை மறுபிரசுரம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் கமல்.
* குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், எந்த நடிகருக்கும் மாஸ்டராக (குழந்தை வேடம்) நடித்தது இல்லை.
* தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தபோது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா மூவருக்கும் நடன அசைவுகள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
* ‘மை டியர் ராஸ்கர்’ என்றுதான் கமலை செல்லமாக அழைப்பார் கே.பாலச்சந்தர்.
* சென்னையில் ஆயிரம் காட்சிகள் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த ஓடிய படம் ‘சகலகலா வல்லவன்’. இதுவரைக்கும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.
* வேட்டி கட்டுவது ரொம்பப் பிடிக்கும். அதுவும், பட்டு வேட்டி என்றால் கொள்ளை இஷ்டம். அவர் பட்டு வேட்டி கட்டினால், அன்று முழுவதும் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்.
* ஸ்டெடிகேமை இடுப்பில் கட்டிக்கொண்டு, லென்ஸைத் தன்பக்கம் திருப்பி, ‘சிங்கிள் மேன்’ யூனிட்டாக ஒரு படத்தை இயக்கி, நடிக்க வேண்டும் என்பது கமலின் நெடுநாளைய ஆசை.
* கோலிவுட் என்று சொன்னால் கமலுக்குப் பிடிக்காது. ‘தமிழ்த் திரையுலகம் என்று சொல்லுங்கள்’ என வேண்டுகோள் வைப்பார்.
* தனக்குப் பிடித்த புத்தகங்கள், படங்களை நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்குப் பரிந்துரைப்பார்.
* இந்திய சினிமாவில் பேசும்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வசனங்களே இல்லாத ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு ‘பேசும் படம்’ எனத் தலைப்பு வைத்த குறும்பு, கமலுக்கே உரிய தனிச்சிறப்பு.
* பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன கால இலக்கியங்கள் வரை அத்தனையும் அத்துப்படி. புதிதாக எழுதுபவர்களில் யாரையாவது பிடித்துவிட்டால், அவர்கள் எழுத்தைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்.
* கமல் ஒரு பேச்சுப் பிரியர். எத்தனை மணி நேரமானாலும் சளைக்காமல் பேசுவார். அவர் பேச ஆரம்பித்தால் நாள் கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
* அபார நினைவுத்திறன் கொண்டவர். சின்ன வயதில் நாடகங்களில் நடித்தபோது கேட்ட பாடல்களை, இப்போதும் அடிபிசகாமல் பாடுவார். தெருக்கூத்துப் பாடல்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்.
* நண்பர்களுடன் ஜாலி மூடில் இருந்தால், பழைய பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவார். நேயர் விருப்பம் போல் நண்பர்கள் அடுத்தடுத்த பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்க, அவரும் பாடிக்கொண்டே இருப்பார்.
* சில வருடங்களாக யோகா மீது ஈடுபாடு வந்திருக்கிறது.
* அப்பாவாக மகள்களிடம் கண்டிப்பு காட்டியதே இல்லை. அவர்கள் விரும்பியதைச் செய்ய முழு சுதந்திரம் உண்டு.
* தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேருவதற்கு முன்பு, ‘சிவாலயா’ என்ற நடனக்குழுவை நடத்தியிருக்கிறார்.
* ‘மய்யம்’ என்ற பத்திரிகையை சில காலம் நடத்தினார். அதை மீண்டும் நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
* மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பார் கமல்.
* பிரசாத் ஸ்டுடியோவில் முதன்முதலாக அகேலா கிரேன் வந்திறங்கியபோது, இரவோடு இரவாகச் சென்று பார்த்தார். மறுநாள் தான் பி.சி.ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்களே வந்து பார்த்தனர். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தின்மீது ஈடுபாடு கொண்டவர்.
* தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, உருது, ஃபிரெஞ்ச் என 9 மொழிகள் இவருக்கு வாய்வந்த கலை.
* பாகிஸ்தான் எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ எழுத்துகள் என்றால், கமலுக்கு சோறுதண்ணி இறங்காது. அவர் படைப்பின் சுவையை முழுவதுமாக உணர்ந்து கொள்வதற்காகவே உருது கற்றவர்.
* ‘சட்டம் என் கையில்’ படம்தான் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம் என்பார்கள். ஆனால், சின்ன வயதில் ‘பார்த்தால் பசி தீரும்’ படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
* யாராக இருந்தாலும், ‘முடியாது’ என்ற வார்த்தையை கமலிடம் உச்சரிக்கவே கூடாது. முயற்சி செய்துவிட்டு முடியவில்லை என்றால் சொல்லலாமே தவிர, ஆரம்பத்திலேயே அப்படிச் சொன்னால் அவருக்குப் பிடிக்காது.
* சினிமா உலகத்தில் கமலின் பிறந்த நாள் பார்ட்டி அவ்வளவு பிரசித்தம். எந்த பந்தாவும் இல்லாமல், பார்ட்டிக்கு அழைக்கப்பட்டவர்கள் அத்தனை பேரிடமும் பிரியமாகப் பழகுவார்.
* கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி கணேசன், விஜயகாந்த், கார்த்திக் என சினிமாவில் இருந்து எத்தனையோ பேர் அரசியலில் இறங்க, அந்த ஆசை கொஞ்சம்கூட இல்லாதவர். காலத்தின் கட்டாயத்தால் இன்று தீவிர அரசியலை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்.
* ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’, அனேகமாக கமலின் கடைசிப் படமாகக் கூட இருக்கலாம். அதன்பிறகு மக்கள் பணியையே முழுநேரமாகக் கவனிப்பார் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.