கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் டாப் டிரெண்டிங்காக இருந்தது ‘லட்சுமி’ குறும்படம். இந்தக் குறும்படத்துக்கு ஆதரவாகப் பலரும், எதிர்த்துப் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டனர். இதனால், இந்தக் குறும்படத்துக்கு இலவசமாக நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது. சர்ஜுன் கே.எம். இயக்கிய இந்தக் குறும்படத்தில், லட்சுமிப்பிரிய சந்திரமெளலி, நந்தன், லியோ சிவதாஸ், மாஸ்டர் மிதுன், சசி ஆகியோர் நடித்திருந்தனர்.
‘லட்சுமி’ குறும்படத்தில், பாரதியார் கவிதையைச் சொல்லி ஒரு பெண்ணை கரெக்ட் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ‘அடுத்தவர் மனைவியை கரெக்ட் செய்யத்தான் பாரதியார் கவிதை எழுதினாரா?’ என எல்லோரும் கொதித்து எழுந்தனர். இதனால், பாரதியாரும் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நேற்று வைத்த பாரதியார் கெட்டப்பிலான புரொஃபைல் பிக்சர், பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. முண்டாசுடன் பாரதியார் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை, தன்னுடைய ட்விட்டரின் புரொஃபைல் பிக்சராக நேற்று வைத்தார் கமல்ஹாசன். இந்தப் புகைப்படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலர் எழுதி வருகின்றனர்.
ஒருவர், அந்த புகைப்படத்தில் கமலுக்குப் பதிலாக வடிவேலு முகத்தை ஒட்டவைத்து வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம், பலரால் பகிரப்பட்டு வருகிறது. இன்னொருவர், ‘பார்ப்பான் முகம் வெளியில் தெரிந்தது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். அல்ட்டிமேட்டாக இன்னொருவர், ‘லட்சுமி’ குறும்படத்தை பார்த்தபிறகுதான் கமல்ஹாசனுக்கு இந்த ஐடியா தோன்றியிருக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.