பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தது. மேலும், கமல் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில், "சட்டத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. அந்த சட்டம் என்னை பாதுகாக்கும் என நம்புகிறேன். என்னை கைது செய்யச் சொல்லும் அந்த கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இல்லை. ஒருவேளை, நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை தவிர்க்க மாட்டேன், சட்டப்படி அதனை எதிர்கொள்வேன். பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? அப்போது ஏன் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை? அதில் கெட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா. ஒருவேளை, அவர்களுக்கு இந்தி தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருக்கலாம். கன்னடாவில் கூட பிக்பாஸ் நடந்தது. அவர்களுக்கு கன்னடமும் தெரியாமல் இருந்திருக்கலாம். 'சேரி பிஹேவியர்' என்று காயத்ரி ரகுராம் கூறியதற்கு நான் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்கவில்லை.
என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைபட்டிருக்கிறேன், மற்றவர்களுக்கு அல்ல. இவர்களும், ஒருவகையில் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். ஏனெனில், 'தசாவதாரம்' படத்தின் போது அவர்கள் தான் என்னை கொண்டாடினார்கள். அதுவே, விஸ்வரூபம் எடுத்த போது எதிர்த்தார்கள். அதற்காக, நான் எனது வேலையை செய்யாமல் இருக்க முடியுமா? இதற்கெல்லாம் பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது. 'விருமாண்டி' படத்தின் போது, தலைப்பை மாற்றச் சொல்லி பெரிய பிரச்சனை கொடுத்தார்கள். ஆனால், அதன் பிறகு அதே அரசு இருந்த போதே, அதே தலைப்பில் வேறொரு படம் வெளியானது. அப்போது யாரும் அதை தட்டிக் கேட்கவில்லை. ஏன், மக்கள் கூட கேட்கவில்லை.
நான் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மார்க் போட விரும்பவில்லை. ஓட்டு போடத் தான் விரும்புகிறேன். நடிகை பாவனா வழக்கில், சட்டம் தனது கடமை சரியாக செய்திருக்கிறது. நான் சட்டம் பக்கம் நிற்கிறேன். ஜி.எஸ்.டி.வரியை நாங்கள் கோரியது போல் குறைக்கவில்லை. ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் மனதார பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பாகவே 'சிஸ்டம் சரியல்ல' என்று முதலில் கூறியது நான் தான். இப்போது அதனை பலர் வழிமொழிவது நல்ல விஷயமே. நடிகர் ரஜினிகாந்த் கூறிய சிஸ்டம் சரியல்ல என்ற கருத்தை நான் எதிர்க்கவில்லை. நான் அரசியல் கட்சி தொடங்கினால், என்ன எதிர்ப்பு இருக்குமோ, அதேபோன்று தான் ரஜினிக்கும் இருக்கும். அவர் அரசியலுக்கு வந்து சிறப்பாக பணியாற்றினால் நல்லது. இல்லையெனில், மற்றவர்களை கேள்விக் கேட்பதைப் போல, ரஜினியையும் நான் கேள்வி கேட்பேன்.
இந்த நாட்டில் கிரிக்கெட் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை பிக்பாஸ்'' என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.