திரைத்துறைக்கு இருபத்தி எட்டு சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியுடன், தமிழக அரசு முப்பது சதவிகிதம் கேளிக்கை வரி விதித்துள்ளதை திரும்பப் பெறக் கோரி, கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், கடந்த வாரம் வெளியான படங்கள், இந்த வாரம் வெளியாகவிருந்த படங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஷங்கர், கமல்ஹாசன், சரத்குமார் என தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இதற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். குறிப்பாக இயக்குனரும், லட்சிய திமுக கட்சி தலைவருமான டி.ராஜேந்தர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய டி.ஆர், ‘‘திரைப்படங்களுக்கு இரட்டை வரி விதித்து இருப்பதால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியையும், 30 சதவிகித கேளிக்கை வரியையும் எப்படி எங்களால் செலுத்த முடியும்? தமிழகம் முழுவதும் இந்த வரி விதிப்புக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடிவிட்டார்கள். தற்போது வெளியாகி இருக்கும் படங்களுக்கு யார் பொறுப்பு?
இதனால் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். தியேட்டர்கள் மூடப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண அரசு இதுவரை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. 10 நாட்கள் தியேட்டர்களை மூடினால், குற்றங்கள் பெருகி சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். பல மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து திரைப்படத்துறைக்கு விலக்கு அளித்து உள்ளன. தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்துசெய்து திரைப்படத்தொழிலை காப்பாற்ற வேண்டும்" என்றார்.
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்விட்டரில், 'ரஜினி சார், தயவு செய்து ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் தமிழக அரசின் வரிக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்களது மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முயற்சி எடுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் மருத்துவ செக் அப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினி இன்று அதிகாலை தனது ட்விட்டரில் கேளிக்கை வரி குறித்து தனது கருத்தினை பதிவு செய்தார். அதில், 'தமிழ் திரைப்படத்துறையில் பணிபுரியும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் வேண்டுகோளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் இந்த டீவீட்டிற்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில்,
"குரல் கொடுத்ததற்கு நன்றி திரு.ரஜினி அவர்களே. முதலில் ஜென்டில்மேனாய் குரல் கொடுப்போம். பிறகு தமிழக அரசை பார்த்துக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.