Kanchana 3 Tamil Movie: முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால், அதன் இயக்குநர் யார் ஹீரோ எப்படி நடித்திருக்கிறார் என்பதைப் பற்றிய பேச்சுகள் தான் மேலோங்கி இருக்கும்.
ஆனால், தற்போதைய சூழல் அப்படியில்லை. படத்தின் டைட்டில் கார்ட் தொடங்கி படம் முடிந்து இருக்கையிலிருந்து எழுவதுக்குள், அந்தப் படத்தை அக்கு வேர் ஆணி வேராக பிரித்து விடுகிறார்கள் விமர்சகர்கள்!
அதனால் படத்தில் நடிகர்கள் பயன்படுத்திய காஸ்ட்யூம்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. படத்தில் வரும் நடிகர்களை அழகாக காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் அந்த உடை, சாதாரணமாக வடிவமைக்கப் பட்டிருக்காது. கதையின் கரு, அது பேசும் அரசியல், நடிகரின் குணம், மூட் என பல்வேறு விஷயங்களின் பிரதிபலிப்பாகவே உடைகள் இருக்கும். தைக்கத் தெரிந்தவரெல்லாம் டிஸைனராகி விட முடியாது. அதன் மேல் ஒரு தேடலும் காதலும் இருப்பவர்களால் மட்டுமே அதில் வெற்றிக் கொடி நாட்ட முடிகிறது.
இப்படி டிஸைனிங் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாத்துறைக்குள் வந்து இன்று காஞ்சனா-3 படத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நிவேதா ஜோசப். இந்தச் சின்ன வயதில் இப்படி பெரிய பட்ஜெட் படத்தில் வேலை செய்த மகிழ்ச்சியில் இருப்பவரின் வீட்டிற்கு விரைந்தோம். சுட்டெரிக்கும் வெயில் என்பதால் வாட்டர் பாட்டிலோடு வாசலில் வந்து நின்று நம்மை வரவேற்றார். தண்ணீரைக் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு, பேசத் தொடங்கினோம்.
உங்களைப் பற்றி?
"என்னோட சொந்த ஊர் நாகர்கோவில், பனிரெண்டாவது வரைக்கும் அங்க தான் படிச்சேன். அதுக்கப்புறம் சென்னைல வந்து காலேஜ் சேர்ந்தேன், பி.டெக் ஐ.டி. குடும்பத்துல ஒரு இன்ஜினியராச்சும் வேணும்ன்னு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி சேர்த்து விட்டாங்க. ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த கிராஃப்ட்ஸ், பெயின்டிங், டிராயிங் மேல எல்லாம் ஈடுபாடு இருந்துச்சு. வீட்ல இருக்க பொம்மைகளுக்கு எல்லாம் மிச்சம் மீதி இருக்க துணில டிரெஸ் தச்சு போட்டு விடுவேன். ஃபேஷன் டிஸைனிங்ன்னு சொன்னதுமே நம்ம கல்ச்சர் மாறிடும்ன்னு வீட்ல விடல. ஊர்ல படிச்சி வளர்ந்த பொண்ணு அப்படியே ஒரு மார்டன் சொஸைட்டிக்கு போகும் போது ஒரு பாதுகாப்பின்மை இருக்குறது சகஜம். அதே மாதிரி பயத்தால தான் எங்க வீட்லயும் முதல்ல ஒத்துக்கல. இன்ஜினியரிங் படிக்கும் போதும், முதல் வருஷத்துல இருந்து கடைசி வருஷம் வரைக்கும் நான் டிஸ்கன்டினியூ பண்றேன்ன்னு தொடர்ந்து சண்டை தான் போட்டுருக்கேன். அதுல ஒரு நாலு வருஷம் வேஸ்ட் ஆகிடுச்சி. அதை முடிச்சிட்டு ஒரு பிரபல ஃபேஷன் டிஸைனிங் இன்ஸ்டிடியூட்ல சர்டிஃபிகேட் கோர்ஸ் படிச்சேன். கோர்ஸ் சேர்ந்து ஆறு மாசத்துக்குள்ளயே ஒரு ஃபேஷன் ஷோ பண்ற வாய்ப்பு கிடைச்சது. முதல் ஷோவே ரொம்ப கிரியேட்டிவா அமைஞ்சது. அப்போ நான் சினிமாவுக்குள்ள வருவேன்னு எல்லாம் எனக்கு அப்போ தெரியாது, அதுவா நடந்தது.
சினிமாவுக்குள் வந்தது எப்படி?
என்னோட ஒர்க்ஸ் பார்த்துட்டு டிஸைனர் தீபாளி நூர் அவங்கக்கிட்ட அஸிஸ்டென்ட்டா என்ன கூப்பிட்டாங்க. அப்படித்தான் ’புலி’ படத்துல வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. ஸோ சினிமாவுல நா வேலை செஞ்ச முதல் படமே பெரிய புராஜெக்ட் தான். ஆனா நான் சேரும் போது பாதி படம் முடிஞ்சிருந்தது. 'புலி' கிரியேட்டிவ்க்கு ரொம்ப ஸ்பேஸ் குடுத்த படமும் கூட. அப்புறம் 'பெங்களூர் நாட்கள்', 'தெறி', 'கடம்பன்', '10 எண்றதுக்குள்ள', 'வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க', 'முடிஞ்சா இவன புடி'ன்னு தமிழ் படங்கள்லயும் நிதின், சமந்தா, நதியா, அனன்யான்னு ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்ட 'அ ஆ'ன்னு ஒரு தெலுங்கு படத்துலயும் தீபாளி நூர் கூட சேர்ந்து ஒர்க் பண்ணினேன். அவங்க ஒரே நேரத்துல ஆறேழு படத்துல கமிட் ஆவாங்க. ஸோ எனக்கு அது ஒரு புதுவித அனுபவமா இருந்துச்சு.
தனிப்பட்ட முறையில் உங்களது அனுபவம்?
ஒரு டிஸைனரா நான் தனியா வேலை செஞ்சப் படம் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' . அதோட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் தான் உன்னால முடியும் நீ பண்ணுமான்னு என்ன என்கரேஜ் பண்ணுனாரு. அதுல ரம்யா நம்பீசன் தான் லீட் ரோல் பண்ணிருப்பாங்க, என்னோட ஒர்க் பிடிச்சு போய் அவங்க அடுத்ததா நடிச்ச சத்யா படத்துல அவங்களுக்கு பெர்சனலா பண்ண சொன்னாங்க. தவிர ரம்யா நம்பீசனோட ஃபோட்டோஷூட், போர்ட்ஃபோலியோன்னு எல்லாத்துக்கும் நான் தான் பண்றேன். அப்புறம் சமுத்திரக்கனி நடிச்ச ’ஏமாலி’ன்னு ஒரு படத்துல எல்லாருக்கும் காஸ்ட்யூம் பண்ணினேன். அது முடிஞ்சதுக்கு அப்புறம் சமுத்திரக்கனிக்கும் பெர்சனலா பண்றேன். அது முடிஞ்சதும் ரம்மி இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்துல கதாயுதம்ன்னு ஒரு படம் பண்ணினேன், டீமானிடைசேஷன் வந்ததும் படம் பாதிலேயே நின்னு போச்சு.
அதுக்கடுத்து நான் கமிட்டான படம் தான் காஞ்சனா 3. நான் தனியா பண்ணின பெரிய படம். அதுல லாரன்ஸ், வேதிகா, நிக்கி தாம்பாலி, ஜாவி அலெக்ஸாண்ட்ரா உட்பட முக்கியமான கேரக்டர்ஸ் அத்தனை பேருக்கும் காஸ்ட்யூம் பண்ணினேன். படத்துல ஒர்க் பண்ணினதுக்கு அப்புறம் லாரன்ஸ் மாஸ்டரும் பெர்சனலா பண்ணித்தர சொன்னாரு, ஸோ அவருக்கும் நான் தான் பெர்சனல் டிஸைனர்.
காஞ்சனா 3-யைப் பற்றி?
காஞ்சனாவை பத்தி சொல்லணும்ன்னா லாரன்ஸ் மாஸ்டரை திருப்தி படுத்துறது ரொம்ப கஷ்டம். அதுல அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒருநாள் திடீர்ன்னு ஒரு சீனுக்கு ஃப்ரெஷ் காஸ்ட்யூம்ஸ் தேவைப்பட்டது, அதுக்கு அவருக்கு 40, 50 ஆப்ஷன்ஸ் வேணும், சென்னைல அந்த காஸ்ட்யூம்ஸ் இல்ல. உடனே டிக்கெட் போட்டு என்ன டெல்லிக்கு அனுப்பி வாங்கிட்டு வர சொன்னாரு. அங்க போய் ஒவ்வொரு காஸ்ட்யூமையும் ஃபோட்டோ எடுத்து அவருக்கு அனுப்பி ஓகே பண்ணி வாங்கிட்டு வந்தேன்.
தனி ஒரு ஆளா பெரிய பட்ஜெட் படத்துக்கு பண்றதுல சவால்கள் நிறைய இருந்துச்சு. ஒரு ஹீரோயின்னா பிரச்னை எதும் இருக்காது. 2, 3 ஹீரோயின்கள் நடிக்கும் போது, நான் தான் ஸ்கிரீன்ல பெஸ்டா தெரியனும்ன்னு எல்லாரும் எதிர்பார்ப்பாங்க. ஸோ, அவங்களயும் திருப்தி படுத்தணும், அதே நேரத்துல கதைக்கு அது தேவை தானாங்குறதையும் பாக்கணும்.
Kanchana 3 Exclusive: Costume Designer Nivetha Joseph Shares her Experience
ஒவ்வொருத்தரும் மத்தவங்க என்ன டிரெஸ் போட்டுருக்காங்கங்கறதுல தான் ரொம்ப கான்ஷியஸா இருப்பாங்க. ஒரு பாட்ல நீங்க பாத்துருக்கலாம், எல்லாரும் ஒரே மாதிரி தான் போட்டுருப்பாங்க, கலர் மட்டும் தான் வேற. மாஸ்டருக்கு பண்றது இன்னொரு சேலஞ்ச்!
இப்போ படம் ரிலீஸாகி சக்ஸஸ் ஃபுல்லா போயிட்டு இருக்கு. எல்லாரும் நல்லா பண்ணிருக்கீங்கன்னு பாராட்டுனாங்க.
மறக்க முடியாத அனுபவம்?
நான் இன்னும் சிறப்பா பண்ணனும்ன்னு மாஸ்டர் எதாச்சும் குறை சொல்வாரு. ‘காதல் ஒரு விழியில்’ பாட்டுக்கு காஸ்ட்யூம் பண்ணி, அதோட ஷூட் முடிஞ்சதும், மீதமிருந்த நாட்கள் முழுவதும் என்ன பாராட்டிக்கிட்டே இருந்தாரு. அதுல தான் எந்த குறையும் சொல்லல.
எல்லாமே லாஸ்ட் மினிட் ஷூட்டா தான் இருக்கும். எதுவுமே பிளான் பண்ணல. அந்த பாட்டுக்கு அப்புரம் தான் அவருக்கு என் மேல நம்பிக்கையே வந்துச்சு.
மாஸ்டரோட மத்த படங்கள்ல பிளைன் இல்லன்னா பளிச் கலர்ல தான் அவரோட காஸ்ட்யூம் இருக்கும். இங்கிலீஷ் கலர், பிரிண்ட் இதெல்லாம் இந்தப் படத்துல தான் முதல் முறையா யூஸ் பண்ணிருக்கோம்.
அடுத்தப் படங்கள்?
இயக்குநர் சசி சாரோர ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துல சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், அப்புறம் 2 ஹீரோயின்ஸ்ன்னு எல்லாருக்கும் பண்ணிருக்கேன். சசிக்குமாரோட ’கொம்பு வச்ச சிங்கம் டா’, சமுத்திரக்கனியோட ‘அடுத்த சாட்டை’ இந்த 3 படமும் முடிஞ்சு ரிலீஸுக்கு வெயிட்டிங். எல்லா படத்துலயும் எல்லா ஆர்டிஸ்டுக்கும் பண்றேன்.
’மாயன்’ படத்தோட ஷூட்டிங் போய்ட்டு இருக்கு.
சினிமாவில் யாருக்கு காஸ்ட்யூம் சென்ஸ் நன்றாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?
சமந்தாவுக்கு ஷூஸ் என்றால் அலாதி பிரியம். அவங்களுக்கு டிரெஸ்ஸுக்கு ஆப்ஷன் தேவையில்லை, ஆனா செருப்பு/ஷூஸ்க்கு குறைஞ்சது பத்து ஆப்ஷனாச்சும் வேணும். அவங்களோட டிரெஸ்ஸிங் சென்ஸும் நல்லாருக்கும். சிம்பிள், ரிச்ன்னு எல்லா காஸ்ட்யூம்ஸும் அவங்களுக்கு செமையா செட் ஆகும்.
நடிகர்கள்ல அல்லு அர்ஜுன், ஏன்னா அவரோட டிரெஸ்ல ஒரு ஸ்டைல் இருக்கும். ஒரு சின்ன சின்ன டீடெய்லிங் அவரோட உடைகள்ல எப்போவும் இருக்கும்.
எந்த நடிகருடன் சேர்ந்து வேலை செய்ய விருப்பம்?
’புலி, தெறி’ன்னு விஜய் சார் கூட அஸிஸ்டென்ட்டா வேலை செஞ்சிருக்கேன். இருந்தாலும் திரும்பவும் தனியா ஒரு காஸ்ட்யூம் டிஸைனரா வேலை செய்யணும்ங்கறது தான் என் ஆசை விருப்பம் லட்சியம் எல்லாமே. ஏன்னா எது போட்டாலும் அவருக்கு சூட் ஆகும். அவர் காஸ்ட்யூம்ஸை கேரி பண்ற விதமே தனி. காஸ்ட்யூம்ஸை பொருத்த வரைக்கும் கம்ஃபர்டபிளா இருக்கணும்ன்னு நினைப்பாரு, அவ்ளோ தான். எதுலயும் ரொம்ப அலட்டிக்க மாட்டாரு. அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அது இருந்தா போதும்ன்னு நினைப்பாரு. ஸோ, கேரக்டர் என்னவோ அத பிரதிபலிக்கிற காஸ்ட்யூம்ஸ் போதும்ன்னு விஜய் சார் விரும்புவாரு.
இப்போ வீட்ல என்ன சொல்றாங்க?
நான் முதல் படத்துல வேலை செய்யும் போது வீட்ல முன் கூட்டியே சொல்லல. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் போது தான் வீட்லயே சொன்னேன். ஒர்க்கிங் ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்து தான் அவங்க நம்பினாங்க. இருந்தாலும் முழுசா சினிமாவுக்குள்ள என்னை விடறதுக்கு அவங்களுக்கு ஒரு தயக்கம். பட் காஞ்சனா பண்ணினதும் ஃபுல் சப்போர்ட்டும் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க" என சந்தோஷப்படும் நிவேதாவுக்கு நமது வாழ்த்துகளையும் சொல்லி விடைப் பெற்றோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.