Advertisment

பான் இந்தியா கலாச்சாரம் வெற்றியா? கன்னட சினிமாவில் சாதித்த தமிழ் இயக்குனர் தயாள் பத்மநாபன் நேர்காணல்

தமிழ்நாட்டில் பிறந்து கன்னட சினிமாவில் 2 மாநில விருதுகளை வென்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் பிறந்த தினமான இன்று (ஜூன் 14) அவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

author-image
D. Elayaraja
New Update
Kondral Paavam Director Dayal Padmanabhan

இயக்குனர் தயாள் பத்மநாபன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து தற்போது கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தயாள் பத்மநாபன். 2001-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கெட்டிமேளா என்ற சீரியல் மூலம் ரைட்டராக அறிமுகமான இவர், அடுத்து 2004-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஓகே சார் ஓகே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இயக்கி வெற்றிகண்ட இவர், 2014-ம் ஆண்டு ஹக்கட ஹோனே மற்றும் 2018-ம் ஆண்டு வெளியாக ஆ காராலா ராத்திரி ஆகிய 2 படங்களுக்கும் கர்நாடக அரசின் மாநில விருதை வென்றுள்ளார். இதில் ஆ காராலா ராத்திரி படத்தை தமிழில் கொன்றால் பாவம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் பிறந்து கன்னட சினிமாவில் சாதித்து வரும் தயாள் பத்மநாபன் பிறந்த தினமான இன்று (ஜூன் 14) அவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் சினிமா ஆர்வம் தொடங்கியது எப்போது?

விழுப்புரத்தில் கலை இலக்கிய பண்பாட்டு கழகம் சார்பில் வீதி நாடகங்கள் அதிகம் நடத்துவார்கள். அங்கிருந்து தொடங்கி எனது தமிழ் வாத்தியார் ராமானுஜத்தின் தாக்கம் காரணமாக எனக்குள் வந்த பாடல் பாடுவது, நடிப்பது, எழுதுவது போன்ற எனது திறமைகளை வெளியில் கொண்டு வந்து போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தார்.

நான் பள்ளியில் படிக்கும்போது கன்னட இயக்குனர் சிவலிங்கையாவின் மகன் நடிகர் முரளி பெரிய நடிகர். நான் பார்ப்பதற்கு கொஞ்சம் அவரை போலவே இருப்பேன். பலரும் என்னை அவ்வாறு சொல்லும்போது எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகமானது. அதற்கு முன்பே பாடுவது, எழுதுவது போன்ற திமைகள் இருந்ததால் நடிகர் ஆக வேண்டும் என்று தோன்றியது.

எனது வீட்டில் அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அதனால் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலை வந்ததால், படிப்புக்கேற்ற வேலை மத்திய அரசு பணி கிடைத்தது. 15 ஆண்டுகள் கழித்து, 33 வயதில் எனது வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தேன். முதலில் மர்மதேசம் இயக்குனர் நாகாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அங்கிருந்து இயக்குனராக மாறினேன்.

உங்கள் சினிமா வாழ்க்கை தமிழ் சினிமாவில் இருந்து தொடங்கியதா?

எனது சினிமா வாழ்க்கை தமிழ் சினிமாவில் இருந்துதான் தொடங்கியது. அதே சமயம் நான் இயக்குனராக அறிமுகமான முதல் படம் கன்னடத்தில் தான். நான் இங்கு பணியாற்றிக்கொண்டு இருந்தபோது பலரின் அறிமுகம் கிடைத்தது. நடிகர் சேத்தன் மூலமாக பலர் அறிமுகமானார்கள். இதன் காரணமாக கன்னடத்தில் ஒரு தொடக்கம் கிடைத்ததால், அங்கு இயக்குனராக அறிமுகமானேன்.

ஆ காராலா ராத்திரி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் நல்ல வரவேற்பை பெற்றது. இதை பற்றி உங்கள் கருத்து?

பான் இந்தியா காலக்கட்டமான இப்போது ஒரு மொழியில் படத்தை எடுத்து அதை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடுவதற்கு நடுவில், இது போன்று கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும்போது தான் சரியாக இருக்கும். ஒரு கதைக்கு இருக்கும் மதிப்பு ரீமேக் செய்தால் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகும். டப்பிங் செய்தால், ரசிகர்கள் கதைக்குள் ஒன்றி பார்ப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் ஒவ்வொரு மொழிக்கும் தனியாக உரிமம் கொடுத்து தான் படத்தை இயக்கினேன். அந்த கதைக்கு தகுதியான வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி.

a karla ratri
இயக்குனர் தயாள் பத்மநாபன் கர்நாடக அரசின் மாநில விருது வென்ற ஹக்கட ஹோனே - ஆ காராலா ராத்திரி

தமிழில் நீங்கள் இயக்கிய இரு படங்களிலும் வரலட்சுமி சரத்குமார் தான் லீடு ரோலில் நடித்திருப்பார். அவரை தேர்வு செய்தது எப்படி?

ஆ காராலா ராத்திரி படம் கன்னடத்தில் ஹிட் ஆன உடனே, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவல் படமாக எடுக்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. தெலுங்கில் வேறு ஒருவர் நடித்திருந்தார். அந்த படத்தை தமிழில் எடுக்கும்போது அவருக்கு எளிதாக இருந்தது. அப்படித்தான் வரலட்சுமி சரத்குமார் வந்தார். இந்த படத்தில் பணியாற்றும்போது, அவருக்கும் எனக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது.

இந்த புரிதல் காரணமாக உருவானது தான் மாருதி நகர் போலீ்ஸ் ஸ்டேஷன் படம். இப்போதும் அவருக்கு 2 கதைகளை சொல்லியிருக்கிறேன். பிற்காலத்தில் மீண்டும் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன். என்னை முழுமையாக புரிந்துகொண்ட ஒரு நடிகை. அதேபோல் ஒரு இயக்குனராக அவரை நான் முழுமையாக புரிந்து வைத்திருக்கிறேன். இருவருக்கும் இடையே நல்ல நம்பிக்கையும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து கன்னட சினிமாவில் 2 விருது வாங்கியது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

நான் விருது வாங்கிய 2 கன்னட படமுமே கன்னl இலக்கியம் சார்ந்தது. இந்த இலக்கியத்தை எடுத்து அதை திரைக்கதையாக மாற்றி இயக்கிய படங்கள். அதுவரைக்கும் கன்னடா எனக்கு படிக்க தெரியாது. கன்னடா இலக்கியங்கள் யூரோப்பியன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் தமிழ் இலக்கியத்திறகும் கன்னடா இலக்கியத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதனால் இந்த இலக்கியத்திற்கு தகுந்தர்போல் கதை கொடுத்தால் அதை வைத்து படம் இயக்கி விடுவதுதான்.

பான் இந்தியாக கலாச்சாரத்தில் கன்னடா கே.ஜி.எஃப், தெலுங்கு பாகுபலி ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் இருக்கும்போது தமிழ் சினமாவில் அப்படி ஒரு படம் வெளியாகவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. இதை பற்றி உங்கள் கருத்து?

எல்லா படமும் பான் இந்தியா படமாக ஆக வாய்பபே கிடையாது. சமீபத்தில் வெளியான, ஆதிபுருஷ், ராதே ஷியாம், சாஹோ ஆகிய படங்கள் பான் இந்தியா படமாக வெளியானாலும், வெற்றி பெறவில்லை. சில மொழிகளில் டப்பிங் படம் பார்க்கும் கலாச்சாரமே கிடையாது. கன்னடத்தில் டப்பிங் படத்தை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். இங்கு டப்பிங் படங்கள் வெளியாகாமல் இருந்தது. அதன்பிறகு வழக்கு தொடர்ந்த பிறகுதான் இங்கு டப்பிங் படங்கள் வெளியாக தொடங்கியது. ஆனாலும் டப்பிங் படம் பார்க்கும் கலாச்சாரம் இங்கு இல்லை.

அதே சமயம், தமிழில் வெளியாகும் படங்கள் நேரடியாக தமிழ் மொழியிலேயே 250-300 தியேட்டர்களில் வெளியாகும். கன்னடா பெல்ட் தியேட்டர்களிலேயே தமிழ் படங்கள் அதிகம் வெளியிடுவார்கள். அதேபோல் கன்னட ரசிகர்களுக்கு மற்ற மொழி படங்களை பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கன்னட படங்களை விட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுப்பவர்கள் கன்னட ரசிகர்கள். அதனால் பான் இந்தியா படம் என்பது எல்லா இடத்திலும் வெற்றியை பெறாது. கே.ஜி.எஃப் பண்ண இயக்குனர் பாகுபலி ஹீரோவுடன் கொடுத்த படம் தான் சலார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.

தமிழ் சினமாவில் எப்போதுமே அதன் நேட்டிவிட்டி தொடர்பான படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் தெலுங்கு வரை போகும். ஆனால் இந்தியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல் கேரளாவில் தமிழ் படங்கள் தமிழ் மொழியில் தான் வெளியாகிறது. இன்றைக்கு தான் நாம் பான் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதற்கு முன்பே தமிழ் படங்கள் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. அப்போது தியேட்டரில் வெளியாகாமல் இருந்தது. அப்போது வெளியிடப்படுகிறது.

குறிப்பாக கேரளாவில் விஜய் படங்கள் மம்முட்டி மோகன்லால் படங்களுக்கு இணையாக பல தியேட்டர்களில் வெளியானது. இதனால் தமிழ் படங்கள் பான் இந்தியா வரவேற்பை பெறவில்லை என்று சொல்ல முடியாது. முன்பு தியேட்டரில் வெளியாகாமல் இருந்தது. இப்போது வெளியாகிறது. அதுதான் வித்தியாசம். ஆனால் ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி அளவுக்கு ஒரு ஹிட் கிடைக்கவில்லை.

கன்னட சினிமாவில் விருது வாங்கிய நீங்கள் முன்னணி ஹீரோக்களுடன் இணைவது எப்போது?

இங்கு இருக்கும் முன்னணி நடிகர்கள் எனக்கு தொழில் ரீதியாக நல்ல நெருங்கிய நண்பர்கள் தான். அவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு தான் இருக்கிறேன். ஆனால் 2011-ல் நான் ஒரு முடிவு செய்தேன். பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டை நம்பி படம் இயக்க கூடாது. என்னையும் நல்ல ஒரு கதையையும் நம்பி தான் படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். 2011-ல் இந்த முடிவை எடுத்து இதுவரை வெற்றிகரமாக கடைபிடித்து வருகிறேன். கடந்த 13 வருடங்களாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கி வருகிறேன்.

இந்த கதைகளில் நடிக்க ஒரு நல்ல நடிகர் இருந்தால் போதும். பெரிய ஹீரோக்கள் தேவையில்லை என்று முடிவு செய்து வேலை பார்ப்பதால், நான் பட வாய்ப்பு கேட்டு அவர்களிடம் செல்லவில்லை. அவர்களை சந்திக்கும்போது இது பற்றி பேசுவார்கள். உங்களுக்கு என்னால் கதை எழுத முடியாது என் பாணி வேறு என்று சொல்லிவிடுவேன். ஆனால் அவர்களுடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

உங்களது அடுத்த தமிழ் திரைப்படம்?

கொண்டால் பாவம், மருதி நகர் என இரு படங்கள் தமிழில் எடுத்துள்ளேன். அடுத்து 3-வது படம் வரும் ஆகஸ்ட் 3-ந் தேதி ஷூட்டிங் போகிறேன். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், நிஹாரிகா, விஜய் ஆண்டனி, அச்யூத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். ஒரு அழகான புதுமையான திரைக்கதையில் இந்த படத்தை இயக்க உள்ளேன். கன்னடத்தில் கப்சா என்ற படத்தை இயக்கி தயாரித்த சந்துரு என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment