முதலில் ரஜினியா? தனுஷா? குழப்பத்தில் கார்த்திக் சுப்பராஜ்

முதலில் ரஜினியை இயக்குவதா அல்லது தனுஷை இயக்குவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

முதலில் ரஜினியை இயக்குவதா அல்லது தனுஷை இயக்குவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

‘பீட்சா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்பராஜ், அதன்பிறகு ‘ஜிகர்தண்டா’ மற்றும் ‘இறைவி’ படங்களை இயக்கியுள்ளார். ‘இறைவி’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு தனுஷ் கால்ஷீட் தருவதாகச் சொன்னதால் காத்திருந்தார். ஆனால், ஒரு வருடமாகியும் தனுஷ் கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கார்த்திக் சுப்பராஜ், பிரபுதேவாவை வைத்து ‘மெர்குரி’ என்ற படத்தைத் தொடங்கினார். ‘மெர்குரி’, சைலண்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, படத்தில் வசனங்களே இருக்காது. காட்சி மற்றும் பின்னணி இசை மூலமாகவே படத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

பிரபுதேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘மெர்குரி’ படம், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘மேயாத மான்’ என்ற படத்தையும் தயாரித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் தனுஷ். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாகும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. மாதவன் – விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்தின் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

திடீரென ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘அரசியலில் இறங்குவது உறுதி’ என கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார் ரஜினி. அவர் நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில், அரசியலில் இறங்குவதற்கு முன்னர் இன்னொரு படத்தில் நடித்துவிட விரும்பினார் ரஜினி. அதுதான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் படம்.

எனவே, அரசியலில் விரைவில் இறங்க இருக்கும் ரஜினியின் படத்தை முதலில் இயக்குவதா? அல்லது இத்தனை மாதங்கள் கழித்து தற்போது கால்ஷீட் தந்திருக்கும் தனுஷ் படத்தை முதலில் இயக்குவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

×Close
×Close