சூர்யா வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோவால், கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு, தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றும், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர். அத்துடன் ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகத்தை டேக் லைனாக வைத்துள்ளனர்.
மேலும், சூர்யாவின் புல்லட்டில் ‘விவசாயி’ என எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படம் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும், கார்த்தி விவசாயியாக நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
கார்த்தி ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா, பிரியா பவானி சங்கர் இருவரும் நடிக்கின்றனர். அத்துடன், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்பிரியா, மெளனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாக இருக்கிறது.
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஷூட்டிங், தற்போது பாண்டிராஜின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தன் மகன் தேவ் உடன் ஷூட்டிங் பார்க்கச் சென்ற சூர்யா, அன்று படமான ரேக்ளா ரேஸ் காட்சியைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Revisited some beautiful childhood memories with Dev..#Rekla #KKS #KadaiKuttySingam #Nostalgia #Culture pic.twitter.com/0e4FvqwWjQ
— Suriya Sivakumar (@Suriya_offl) 30 January 2018
தன்னுடைய சின்ன வயது நினைவுகளை தேவ் உடன் மீட்டெடுப்பதாகத் தெரிவித்த சூர்யா, ஷூட்டிங் காட்சியையும் வீடியோவாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Shooting spot..! #Rekla #KKS #KadaiKuttySingam #Nostalgia #Culture pic.twitter.com/GYGuNDGIoa
— Suriya Sivakumar (@Suriya_offl) 30 January 2018
ரேக்ளா ரேஸ் பந்தயத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அனுமதி பெறாமல் ரேக்ளா ரேஸ் காட்சி படமாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. விலங்குகள் நல வாரியம் இந்த விஷயத்தில் தலையிட்டிருப்பதால், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.