‘இந்த உலகத்தின் மிக சுவையான உணவு கருவாடு தான்’ என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் தியாகராஜன் கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சீமத்துரை’. யுவன் மீடியா ஒர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கீதன், வர்ஷா பொல்லம்மா இருவரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த விஜி சந்திரசேகர், இந்தப் படத்திலும் வலிமையான கேரக்டரில் நடித்துள்ளார்.
தஞ்சாவூரை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், கருவாடு விற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் இசை வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “இயக்குநர் சந்தோஷ் என்னைச் சந்திக்க வந்திருந்தபோதுதான் முதன்முதலாக அவரைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
தன்னுடைய மண் சார்ந்தே முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே மேக்கிங்கை ஒளிபரப்பிய இயக்குநரின் நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் மட்டும் நான் இதைச் செய்தேன். டிரெய்லரில் கருவாடு விற்பது போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்த உலகத்தின் மிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்புக்கும் ஈடு இணையான உணவே கிடையாது” என்று தெரிவித்தார்.