உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான முதல் படம் ரோஜா இல்லை என்று கவிஞர் வைரமுத்து புதிய தகவலை வெளியிட்டுள்ளர்.
இந்திய சினிமாவின் முதல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளராக அறிமுகமானவதற்கு முன்பு இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, இளையராஜா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.
முன்னணி இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்தாலும் அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு புதிய இசையை அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்தில் சிறந்த இசைக்காக தேசிய விருதை வென்றிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு இந்தி, கன்னடமா, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிப்படங்களுக்கும், ஆங்கிலம் அரபு உள்ளிட்ட சில வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
பெரும்பாலும் ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைக்கும் படங்களுக்கு கவிஞர் வைரமுத்துதான் பாடல்கள் எழுதுவார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா இல்லை. அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததும் இயக்குனர் மணிரத்னம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து பாடல், வசனம் எழுதி இயக்குனர் அமீர்ஜன் இயக்கிய வணக்கம் வாத்தியாரே என்ற படம் தான் ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம். இந்த படம் தயாராகும்போது இசையமைக்கும் அளவுக்கு தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்பதால், இளையராஜாவிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம், கீபோர்டு மட்டும் வைத்து இந்த படத்திற்கு மொத்த இசையை அமைக்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இதற்கு ஓ.கே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நாளில் 8 மணி நேரத்தில் கீபோர்டு மூலம் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்துள்ளார். இந்த படத்திற்கான பாடல் இசைக்கு வி.ஆர்.சம்பத்குமாருடன் இணைந்து ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலருக்கும் ரோஜா தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், கவிஞர் வைரமுத்து கூறியுள்ள இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1991-ம் ஆண்டு வெளியான வணக்கம் வாத்தியாரே படத்தில் கார்த்தி, சரண்யா, ராதாரவி, ஜெய்சங்கர், அனுராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“